பள்ளி முடிந்ததும் நான் வழக்கம்போல் என் வீட்டை நோக்கி நடந்தேன். நான் வசிக்கும் அடுக்குமாடிக் கட்டடத்தை அடைந்ததும் மின்தூக்கிக்காகக் காத்திருந்தேன்.
நீண்ட நேரம் ஆகியும் அது வரவில்லை. திடீரென்று மின்தூக்கியின் கதவுகள் திறந்தன. மின்தூக்கியினுள் நான் கண்ட காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது.
அங்கு ஓர் ஆடவர் கோமாளியைப் போல வேடமிட்டு மின்தூக்கியிலிருந்து வெளியே வந்தார். கீழ்த்தளத்திலுள்ள வழிப்போக்கர்களைக் கண்டதும் அவர் வித்தைகள் காட்டத் தொடங்கினார்.
அவரை நான் அதற்கு முன்பு பார்த்ததே இல்லை. அவரது கையில் ஒரு பெரிய பையும் மூன்று பந்துகளும் இருந்தன. பையைக் கீழே வைத்துவிட்டு, மூன்று பந்துகளையும் மேலே எறிந்து பிடித்து வித்தை காட்டினார். அதைப் பார்த்து நான் வயிறு குலுங்கச் சிரித்தேன்.
மற்றவர்களையும் தம்மிடம் வரவழைத்து, வித்தைகள் காட்டிச் சிரிக்க வைத்தார். பின்னர், நான் மின்தூக்கியில் ஏறி என் வீட்டிற்குச் சென்றேன். வீட்டை அடைந்ததும், கதவு திறந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டேன்.
அம்மாவும் அப்பாவும் அவசரத்தில் கதவைப் பூட்ட மறந்துவிட்டார்கள் என்று நினைத்து உள்ளே சென்ற எனக்குத் தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. அலமாரிகள் திறந்து கிடந்தன.
நகை அலமாரியில் இருந்த நகைகளையும் காணவில்லை. வீட்டிலிருந்த முக்கியமான பொருள்கள் சிலவும் காணாமல் போயிருந்தன. அச்சத்தில் என் இதயம் படபடவெனத் துடித்தது.
என்ன செய்வதென்று தெரியாமல் நான் ஒரு கணம் திகைத்து நின்றேன். அப்போது, மின்னல் வேகத்தில் எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. உடனே, தொலைபேசி மூலம் என் பெற்றோரைத் தொடர்புகொண்டு வீட்டின் நிலைமையை விளக்கினேன்.
அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அச்சமயம் கோமாளி வேடமிட்டிருந்த ஆடவரின் பெரிய பை என் நினைவுக்கு வந்தது. காணாமல் போன பொருள்கள் அந்தப் பையில் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது.
உடனே, நான் கீழ்த்தளத்திற்குச் சென்றேன். அந்த ஆடவர் இன்னும் மற்றவர்களுக்கு வித்தைகள் காட்டிக்கொண்டிருந்தார். நான் அவரைத் தொலைவிலிருந்து ரகசியமாகக் கண்காணித்தேன். சிறிது நேரத்தில் இரண்டு காவலர்கள் அங்கு வந்தனர்.
நான் உடனே அவர்களை அணுகி, “ஐயா, அந்த ஆடவரின் பையில் எங்கள் வீட்டிலிருந்து திருடப்பட்ட பொருள்கள் இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்,” என்று தெரிவித்தேன். காவலர்கள் அவரை நோக்கிச் சென்றதும், அவர் மெதுவாகப் பின்வாங்கினார்.
அவர்கள் அருகில் சென்றவுடன், திடீரெனத் தப்பியோட முயன்றார். காவலர்கள் அவரைப் பின்தொடர்ந்து ஓடினர். நானும் அவர்களுக்குப் பின்னால் சென்றேன். சிறிது நேரத்தில், காவலர்கள் அந்த ஆடவரைப் பிடித்தனர்.
விசாரணைக்காகக் காவலர்கள் அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். நானும் அவர்களுடன் சென்றேன். அங்கு என் பெற்றோரைக் கண்டதும், நடந்தவற்றை அவர்களிடம் விளக்கினேன்.
காவலர்கள் அந்த ஆடவரின் பெரிய பையைச் சோதனையிட்டனர். அதில் எங்கள் வீட்டிலிருந்து காணாமல் போன நகைகளும் முக்கியமான பொருள்களும் இருந்தன.
அவற்றைக் கண்டதும் மகிழ்ச்சியில் என் பெற்றோரின் முகங்கள் மலர்ந்தன. உரிய நடவடிக்கைகளுக்குப் பிறகு, காவலர்கள் பொருள்களை என் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
என் மனத்தை ஆட்கொண்டிருந்த அச்சம் நீங்கி, நிம்மதி பிறந்தது. வீட்டிற்குத் திரும்பியதும், என் பெற்றோர் எனது விழிப்புணர்வையும் சமயோசிதமான செயலையும் பாராட்டினர். அவர்களின் பாராட்டு என் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
காவலர்கள் நடந்த சம்பவத்தைப் பள்ளிக்குத் தெரிவித்திருந்தனர். அதனால், மறுநாள் பள்ளியில் தலைமையாசிரியரும் என்னைப் பாராட்டினார். பெருமையால் என் உள்ளம் பூரித்தது.
திருட்டுச் சம்பவம் நடந்தால், பதற்றமடையாமல் உடனடியாகப் பெரியவர்களிடம் தெரிவித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்க வேண்டும் என்பதை இந்த அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டேன்.
