உண்ணக்கூடிய மெழுகுவர்த்திகளால் உருவான வண்ணக் கோலம்

உண்ணக்கூடிய மெழுகுவர்த்திகளால் உருவான வண்ணக் கோலம்

படம்: விஜயா மோகன்

19 Oct 2026 - 6:15 am

2 mins read

தீபாவளி என்றாலே பலகாரங்கள், வண்ணப் பொருள்கள் ஆகியவை நமது நினைவிற்கு வரும்.

பல்லாண்டுகளாகக் கோலம் வரைந்து சாதனை படைத்துள்ள கலைஞர் விஜயா மோகனும் அவரது பணிக்கு உதவிக்கரம் நீட்டும் நண்பர்களும் இந்த ஆண்டு தீபாவளியை மிகவும் புதுமையான முறையில் கொண்டாடினர்.

அதில் சிறப்பு என்னவென்றால், தங்கள் கோலங்களுக்காக அவர்கள் பயன்படுத்திய விளக்குகள் உண்ணக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டன.

தேக்கா பிளேஸ் கடைத்தொகுதியில் அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அதிசயக் கோலத்தை அக்குழுவினர் வரைந்தனர்.

பலதரப்பட்ட மக்களால்  உருவாக்கப்பட்ட கோலம்.
பலதரப்பட்ட மக்களால் உருவாக்கப்பட்ட கோலம். - படம்: விஜயா மோகன்

உண்ணக்கூடிய மெழுகுவர்த்திகளால் உருவாக்கப்பட்ட அக்கோலங்கள், சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சமூக, கலாசார, இளையர் அமைச்சின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஜாலான் புசார் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் பலர் ஒன்றாய்க் கூடிக் கொண்டாடினர்.

வெண்ணெய், சர்க்கரை, ரோஸ், வெண்ணிலா, சாக்லேட் போன்ற சுவைகளைப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட 320 உண்ணக்கூடிய மெழுகுவர்த்திகளை அவர்கள் தங்கள் வீட்டிலேயே தயார் செய்தனர். உண்ணக்கூடிய பசையைத் திரியாகப் பயன்படுத்தி, உண்மையான மெழுகுவர்த்தி போலவே அதை உருவாக்கி ஏற்றினர்.

சிறுவனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ .
சிறுவனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ . - படம்: விஜயா மோகன்

விளக்கு அணைந்தவுடன், பிக்கானர்வாலா கடை வழங்கிய பன்களுடன் சேர்த்து அந்த மெழுகுவர்த்தியை விழாவிற்கு வந்திருந்த அனைவரும் ருசித்துச் சாப்பிட்டனர்.

இந்த விழாவின் மற்றொரு சிறப்பு, அனைவரும் இணைந்து உருவாக்கிய பெரிய ரங்கோலி கோலம். 5 வயதுச் சிறுவர்கள் முதல் 90 வயது முதியவர்கள் வரை, மாற்றுத்திறனாளிப் பிள்ளைகள் உட்பட பல இன மக்களும் ஒன்றாக இணைந்து வண்ண ஜவ்வரிசியால் மிக அழகாக கோலம் போட்டனர்.

“நமது ஐந்து விரல்களையும் பயன்படுத்திக் கோலம் போடுவது, குழந்தைகளின் கவனத்தை அதிகரிக்கும் எனத் திருவாட்டி விஜயா கூறினார்.

எல்லோரும் ஒன்றாக இணைந்து பாட்டுப் பாடி, நடனமாடி மகிழ்ந்த இந்த விழா, சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் திருவாட்டி விஜயாவின் 60வது சாதனையாக இடம்பிடித்துள்ளது. பல இன மக்களையும் ஒன்றிணைத்து, அன்பைப் பகிர்ந்துகொள்ளும் இந்த தீபாவளிக் கொண்டாட்டம் அனைவருக்கும் ஒரு சிறந்த பாடமாகும்.

குறிப்புச் சொற்கள்