லிட்டில் இந்தியாவில் தீபாவளிப் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் உற்சாகமாகத் தொடங்கியுள்ளன.
இந்திய மரபுடைமை நிலையத்தில் தீபாவளிப் பொது வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (அக்டோபர் 17) தொடங்கி, நவம்பர் 8ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது.
அந்நிகழ்ச்சியில், பழைய தீபாவளிக் கொண்டாட்டங்களை நினைவூட்டும் அலங்காரங்கள், புகைப்படங்கள், பாரம்பரிய ஆடைகள் போன்றவற்றைப் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.
புகைமூட்டம் காரணமாகத் தொடக்கவிழாவின்போது நடைபெறும் வெளிப்புற ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் இந்திய மரபுடைமை நிலையத்தின் உட்புறத்திற்கு மாற்றப்பட்டன.
“நிகழ்ச்சிகளை உள்ளரங்கில் நடத்துவது ஒரு நல்ல யோசனைதான்,” என்றார் 45 வயது சுரேஷ்.
அவரது மகள் ஆடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
“புகைமூட்டம் காரணமாக, மற்ற இனத்தவர் உட்பட பலர் நிலையத்துக்குள் இருக்க விரும்புகிறார்கள். இது சாதகமானது,” என அவர் பகிர்ந்துகொண்டார்.
மக்களின் வருகையில் சற்றுத் தேக்கம் காணப்பட்டாலும், உள்ளரங்குச் சூழல் விழா உணர்வை மாறாமல் தந்தது.
பாரம்பரியப் பட்டுச்சேலை அணிதல், கைவினைப் பயிற்சிகள், கிளி ஜோசியம், தீபாவளிச் சந்தை, பாரம்பரிய விளையாட்டுகள் ஆகிய அங்கங்கள் அனைத்து இன மக்களையும் வெகுவாகக் கவர்ந்தன.
தீபாவளி பற்றிய சில கேள்விகளுக்குப் பதிலளிப்பதை 9 வயது புரவலன் ரசித்தார்.
“தீபாவளி பண உறைகள் மிகவும் அழகாக உள்ளன,” என்றார் அவர்.
மரபுடைமை நிலையத்தைத் தாண்டி லிட்டில் இந்தியா நிலையத்திலும் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.
மேலும், இந்நிகழ்வுகளுக்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் மரபுடைமை நிலையம் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மேல் விவரங்களுக்கு https://www.indianheritage.gov.sg/en/whats-on/programmes/deepavali-2026 என்ற இணையப்பக்கத்தைப் பொதுமக்கள் நாடலாம்.
