புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்ட சிங்கப்பூர் வரலாற்றுக்கூடம்

தேசிய அரும்பொருளகத்தின் 139வது ஆண்டுவிழா கொண்டாட்டம்

புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்ட சிங்கப்பூர் வரலாற்றுக்கூடம்

படம்: தேசிய அரும்பொருளகம்

12 Oct 2026 - 12:04 pm

4 mins read

கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று, பழங்காலச் சிங்கப்பூரின் தெருக்களில் நடப்பது எப்படி இருக்கும்? அக்காலத்தில் வாழ்ந்த மக்களைச் சந்திப்பது எப்படி இருக்கும்? நமது தேசிய அரும்பொருளகத்தின் சிங்கப்பூர் வரலாற்றுக்கூடம் இத்தகைய அனுபவத்தை புதுப்பொலிவுடன் வழங்குகிறது!

தேசிய அரும்பொருளகம் தமது 139ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், மூன்றாண்டுகாலப் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு அதன் முக்கியக் காட்சிக்கூடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. புதிய காட்சிப்பொருள்கள், இருவழித் தொடர்பு விளையாட்டுகள், பல்லூடக அனுபவங்கள் என ஆராய்ந்து பார்க்க ஏராளமானவை உள்ளன.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம் நினைவுப் பலகையைத் திறந்துவைத்தார். அக்டோபர் 10 முதல் பொதுமக்கள் வரலாற்றுக்கூடத்தைப் பார்வையிடலாம்.

சிங்கப்பூர் வரலாற்றுக்கூடத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம் நினைவுப் பலகையைத் திறந்துவைத்தார்.
சிங்கப்பூர் வரலாற்றுக்கூடத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம் நினைவுப் பலகையைத் திறந்துவைத்தார். - படம்: தேசிய அரும்பொருளகம்

அக்டோபர் 10 முதல் 12 வரை அனைவருக்கும் காட்சிக்கூடங்களில் அனுமதி இலவசம். அதற்குப் பிறகும் சிங்கப்பூர்க் குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் இலவச அனுமதி உண்டு.

மூன்றாண்டுகாலப் புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் வரலாற்றுக்கூடம் சனிக்கிழமை (அக்டோபர் 10) தேசிய அரும்பொருளகத்தில் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
மூன்றாண்டுகாலப் புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் வரலாற்றுக்கூடம் சனிக்கிழமை (அக்டோபர் 10) தேசிய அரும்பொருளகத்தில் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. - படம்: தேசிய அரும்பொருளகம்

அதுமட்டுமல்லாமல் அக்டோபர் 10 முதல் 18 வரை ‘அன்றாடக் கதைகள்’ (Stories of Everyday) என்ற கருப்பொருளில் அரும்பொருளகத்தின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன.

சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் முன்பு இருந்த பெரிய மணற்கல் பாறையின் ஒரு பகுதியான சிங்கப்பூர் கல், கண்காட்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்று. 1843ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் அந்தப் பாறை வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது. அந்தக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ள ‘கவி’ (Kawi) எழுத்துகள் தெற்காசியாவின் சமஸ்கிருத மொழியுடன் தொடர்புடையவையாகக் கருதப்படுகின்றன.

10ஆம் நூற்றாண்டுக்கும் 14ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ‘சிங்கப்பூர்க் கல்’.
10ஆம் நூற்றாண்டுக்கும் 14ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ‘சிங்கப்பூர்க் கல்’. - படம்: தேசிய அரும்பொருளகம்

இந்தக் கல்லை அடிப்படையாகக் கொண்டு ‘ஸ்டோனி’ (Stoney) எனும் புதிய சின்ன உருவத்தையும் அரும்பொருளகம் அறிமுகப்படுத்தியுள்ளது. உடைந்த கல்லின் ஒரு துண்டுக்கு உயிர் வந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவான ஸ்டோனி, தனது கடந்தகாலத்தைத் தேடி சிங்கப்பூரைச் சுற்றி வருகிறது.

‘ஸ்டோனி’ எனும் புதிய சின்ன உருவத்தையும் தேசிய அரும்பொருளகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘ஸ்டோனி’ எனும் புதிய சின்ன உருவத்தையும் தேசிய அரும்பொருளகம் அறிமுகப்படுத்தியுள்ளது. - படம்: தேசிய அரும்பொருளகம்

பண்டைய வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு பல்வேறு வியப்பூட்டும் காட்சிகளும் காத்திருக்கின்றன. இறக்கைகள் கொண்ட குதிரையின் மீது அமர்ந்திருக்கும் மனிதரைச் சித்தரிக்கும் சிறிய உருவம் ஒன்று 1998ஆம் ஆண்டு எம்பிரஸ் பிளேஸ் பகுதியில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்டது. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த உருவம் யாரைக் குறிக்கிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை.

1998ஆம் ஆண்டு எம்பிரஸ் பிளேஸ் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட இறக்கைகள் கொண்ட குதிரையின் மீது அமர்ந்திருக்கும் மனிதரைச் சித்தரிக்கும் சிறிய உருவம்.
1998ஆம் ஆண்டு எம்பிரஸ் பிளேஸ் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட இறக்கைகள் கொண்ட குதிரையின் மீது அமர்ந்திருக்கும் மனிதரைச் சித்தரிக்கும் சிறிய உருவம். - படம்: தேசிய மரபுடைமை கழகம்

தமிழ் மொழியின் வரலாற்றுத் தடங்களையும் இங்கு காணலாம். 1881ன் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காக வீடுகளுக்கு வழங்கப்பட்ட படிவம் ஒன்றில் ஆங்கிலம், மலாய், தமிழ், சீனம் ஆகிய மொழிகளில் வழிமுறைகள் அச்சிடப்பட்டிருந்தன. அக்காலத்திலேயே தமிழ், காலனித்துவ நிர்வாகத்தில் பயன்படுத்தப்பட்ட மொழிகளில் ஒன்றாக இருந்ததை இது காட்டுகிறது.

1881ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் படிவத்தில் ஆங்கிலம், மலாய், சீன மொழிகளுடன் தமிழும் இடம்பெற்றுள்ளது.
1881ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் படிவத்தில் ஆங்கிலம், மலாய், சீன மொழிகளுடன் தமிழும் இடம்பெற்றுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அருகில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கைவண்டி ஒன்றை இழுத்துப் பார்க்கவும் முடியும். ஏறத்தாழ 30 கிலோ எடையுள்ள அந்தக் கைவண்டியை இழுக்கும்போது, பழங்காலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தொழிலாளர்கள் எதிர்கொண்ட உடல் உழைப்பைப் பற்றி புரிந்துகொள்ளலாம்.

ஏறத்தாழ 30 கிலோ எடையுள்ள கைவண்டியை இழுத்து பார்க்கலாம்.
ஏறத்தாழ 30 கிலோ எடையுள்ள கைவண்டியை இழுத்து பார்க்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வார இறுதி நாள்களில் ‘சென்’ எனும் கைவண்டி இழுப்பவரின் பாத்திரத்தில் வரும் கலைஞரையும் சந்தித்து, அந்தக் கால வாழ்க்கையைப் பற்றிய கதைகளைக் கேட்கலாம்.

‘சென்’ எனும் கைவண்டி இழுப்பவரின் பாத்திரத்தில் வரும் கலைஞரை சந்திக்கலாம்.
‘சென்’ எனும் கைவண்டி இழுப்பவரின் பாத்திரத்தில் வரும் கலைஞரை சந்திக்கலாம். - படம்: தேசிய அரும்பொருளகம்

கடந்த 1930கள் முதல் 1950கள் வரை ‘தமிழ் முரசு’ நாளிதழில் பல கட்டுரைகளை எழுதிய பாவலர் ந. பழநிவேலு, கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் விளங்கினார். 1953ஆம் ஆண்டு இளையர்களுக்காக அவர் எழுதிய ‘தம்பிக்கு’ என்ற கவிதை இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பாவலர் ந. பழநிவேலு 1953ல் இளையர்களுக்காக எழுதிய ‘தம்பிக்கு’ என்ற கவிதை.
பாவலர் ந. பழநிவேலு 1953ல் இளையர்களுக்காக எழுதிய ‘தம்பிக்கு’ என்ற கவிதை. - படம்: யோகிதா அன்புச்செழியன்

அந்தக் கவிதை இளையர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருக்கவும், உதவி தேவைப்படுவோருக்குக் கைகொடுக்கவும், வறுமையை ஒழிக்கப் பாடுபடவும் வலியுறுத்துகிறது.

சிங்கப்பூர் தேசிய கீதத்தை இசையமைக்க இசைக் கலைஞர் ஸுபிர் சையத் பயன்படுத்திய பியானோவும் முதன்முறையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தேசிய கீதத்தை இசையமைக்க இசைக் கலைஞர் ஸுபிர் சையத் பயன்படுத்திய பியானோ.
சிங்கப்பூர் தேசிய கீதத்தை இசையமைக்க இசைக் கலைஞர் ஸுபிர் சையத் பயன்படுத்திய பியானோ. - படம்: தேசிய அரும்பொருளகம்

1978ன் புதுப்பிக்கப்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக மின்தூக்கி ஒன்று இங்கு இடம்பெற்றுள்ளது. உயரமான அடுக்குமாடி வீடுகளில் வாழ்வது அப்போது பலருக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

1978ன் புதுப்பிக்கப்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக மின்தூக்கி.
1978ன் புதுப்பிக்கப்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக மின்தூக்கி. - படம்: தேசிய அரும்பொருளகம்

மின்னிலக்க உணவங்காடி மேசையில் உணவுப் படங்களைத் தொட்டு, அவற்றின் பின்னணிக் கதைகளைத் தெரிந்துகொள்ளலாம். அவற்றில் கேரளாவைச் சேர்ந்த எம்.ஜே. கோமஸ் ‘மீன் தலைக் கறியை’ (Fish Head Curry) உருவாக்கிய கதையும் இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூரின் உணவுப் பண்பாட்டை சித்தரிக்கும் அங்கம்.
சிங்கப்பூரின் உணவுப் பண்பாட்டை சித்தரிக்கும் அங்கம். - படம்: தேசிய அரும்பொருளகம்

காட்சிக்கூடத்தின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குரல் பதிவு முனையங்களில், அங்கு இடம்பெறும் வரலாற்றுக் கதைகள் குறித்து உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கான உங்கள் பதில், காட்சிக்கூடத்தின் இறுதியில் இடம்பெறும் எதிர்காலச் சிங்கப்பூரின் மின்னிலக்கக் காட்சியை உருவாக்க உதவும்.

பார்வையாளர்கள் தங்கள் எண்ணங்களைக் குரல் பதிவாகப் பகிர்ந்துகொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் தங்கள் எண்ணங்களைக் குரல் பதிவாகப் பகிர்ந்துகொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: தேசிய அரும்பொருளகம்

வரலாற்றுக்கூடத்தைப் பார்வையிடுவதுடன், அரும்பொருளகத்தின் 139ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்ளலாம். அக்டோபர் 18 வரை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சிகளில், வார இறுதி நாள்களில் ஸ்டோனியை நேரில் சந்திக்கவும், கைவினைப் பயிற்சியில் பங்கேற்கவும் வாய்ப்புள்ளது.

காட்சிக்கூடங்களில் கடைசி நுழைவு மாலை 6.30 மணிக்கு.

கைவினைப் பயிற்சியில் பங்கேற்று, ‘பைப் கிளீனர்’களைப் பயன்படுத்தி உங்களுக்கான சிறிய ‘ஸ்டோனி’ பொம்மையையும் உருவாக்கலாம்.
கைவினைப் பயிற்சியில் பங்கேற்று, ‘பைப் கிளீனர்’களைப் பயன்படுத்தி உங்களுக்கான சிறிய ‘ஸ்டோனி’ பொம்மையையும் உருவாக்கலாம். - படம்: தேசிய அரும்பொருளகம்

அக்டோபர் 18ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை அரும்பொருளகத்தின் ஆலமரத்தடியில் இலவசப் பனிக்கூழும் வழங்கப்படும்.

இந்த விடுமுறையில் பெற்றோருடனும் நண்பர்களுடனும் தேசிய அரும்பொருளகத்துக்குச் சென்று பாருங்கள். பண்டைய கற்கள், பழைய நினைவுகள், தமிழ் இலக்கியம், உணவுகளின் வரலாறு என ஒவ்வொரு பகுதியிலும் புதிதாக ஏதாவது ஒன்றைக் கண்டறியலாம்.

வரலாறு என்பது பாடப்புத்தகத்தில் படிப்பது மட்டுமல்ல. நாம் வாழும் நாட்டை உருவாக்கிய மக்களின் கதைகளை நேரில் அறிந்துகொள்வதும்தான்!

குறிப்புச் சொற்கள்