வழக்கமாகச் சூரியனின் பொன்னிறக் கதிர்களால் பிரகாசிக்கும் வானம், கடந்த சில வாரங்களாக சாம்பல் நிறப் புகையால் சூழப்பட்டிருந்தது.
11 வயது சஞ்சய், தனது ‘என்95’ முகக்கவசத்தைச் சரியாகப் பொருத்திக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தான்.
சஞ்சய்யும் அவனது 15 வயது அக்கா பிரியாவும் பள்ளிக்குப் புறப்பட்டனர். இருவரும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தனர்.
நடைபாதையில் சென்றபோது, சஞ்சய் சுற்றிலும் கவனித்தான். புகை மூட்டத்திற்கு மத்தியிலும், அருகில் இருந்த கட்டடத்தில் கட்டுமான ஊழியர்கள் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தனர்.
சாலைகளில் உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் (Delivery Riders) தங்கள் இருசக்கர வாகனங்களில் வேகமாகச் சென்று கொண்டிருந்தனர்.
“அக்கா, இந்தப் புகைமூட்டத்திலும் இவர்கள் எவ்வளவு உழைக்கிறார்கள், பாருங்கள்!” என்று சஞ்சய் ஆச்சரியத்துடன் கூறினான்.
பிரியா பெருமூச்சுடன், “ஆமாம் சஞ்சய், காட்டுத் தீயினால் ஏற்படும் புகைமூட்டம் எல்லாரையும் பாதிக்கிறது. இருந்தாலும் நம்மைவிட நாள் முழுவதும் வெட்டவெளியில் வேலை செய்யும் இந்த உழைப்பாளர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது,” என்றாள்.
இருவரும் பேருந்து நிறுத்தத்தை அடைந்தனர். பேருந்து வந்ததும் அதில் ஏறினர். சலிப்பு தரும் வெப்பத்திற்கு இடையில் பேருந்திற்குள் இருந்த குளிரூட்டி அவர்களுக்கு இதமாக இருந்தது.
“நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! வீட்டிலும், பேருந்திலும், நமது வகுப்பறையிலும் குளிரூட்டி வசதி இருக்கிறது. குடிப்பதற்குத் தூய்மையான குடிநீரும் முகக்கவசங்களும் நம்மிடம் உள்ளன. அதுமட்டுமன்றி, இந்த வெப்பத்தைத் தணித்து காற்றைச் சுத்தமாக்க மழையும் நமக்கு உதவுகிறது,” என்றான் சஞ்சய்.
பேருந்து சென்று கொண்டிருந்தபோது, இந்தப் பரவலான புகைமூட்டத்திற்கு இந்தோனீசியாவில் ஏற்படும் காட்டுத் தீயே முக்கியக் காரணம் என்பதைப் பற்றிப் பேசத் தொடங்கினர். இயற்கை அன்னை நமக்கு அளித்த காற்று எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை இருவரும் உணர்ந்தனர்.
“அப்படியானால், அண்டை நாட்டினர் மீது நாம் கோபம் கொள்ள வேண்டுமா அக்கா?” என்று சஞ்சய் அப்பாவித்தனமாகக் கேட்டான்.
பிரியா புன்னகையுடன், “இல்லை சஞ்சய், நாம் அண்டை நாட்டு மக்கள்மீது வெறுப்புக் கொள்ளக் கூடாது. சுயநலம் பிடித்த சில பொறுப்பற்ற நிறுவனங்கள் செய்யும் தவறுகளால், அங்கு வாழும் அப்பாவி மக்களும் நம்மைப் போலவே பாதிக்கப்படுகிறார்கள்,” என்று தெளிவுபடுத்தினாள்.
“நமது சிங்கப்பூர் சிறிய நாடு. என்றாலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது. பல நாடுகள் நம் நாட்டின் பசுமை மேலாண்மையைப் பார்த்து வியக்கின்றன. எனவே, நாம் என்றும் நமது இயற்கைச் சூழலைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்,” என்று பிரியா விளக்கினாள்.
கடினமான சூழல்களில்தான் சமூகத்தின் ஒற்றுமை சோதிக்கப்படுகிறது. இத்தகைய காலங்களில், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
குறிப்பாக, வெளிவேலையில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் எளியவர்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு சஞ்சயும் பிரியாவும் பள்ளி வளாகத்திற்குள் சென்றனர்.
