ஆறாண்டுகள் தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவர்களுடன் நட்பை வலுப்படுத்திக்கொள்கிறார்கள். இந்த நண்பர்களில் எவருமே உயர்நிலைப்பள்ளிக்கு அவர்களோடு சேர்ந்து வரவில்லை என்றால் மாணவர்கள் சிலருக்கு உலகமே இருண்டது போன்ற உணர்வு ஏற்படுவதாகக் கூறுகிறார் மனநல ஆலோசகர் திவ்யா நாதன். உயர்நிலை ஒன்றில் பயிலும் மாணவர்களில் சிலர் பள்ளி தொடங்கிய சில வாரங்களுக்கு அமைதியாக இருப்பார்கள் என்று அவர் கூறினார்.
புதிய நட்பு வட்டத்தைப் பிள்ளைகள் உருவாக்கிக்கொள்ளப் பெற்றோர்களும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று அவர் சொன்னார். அவரை அணுகியவர்களில் ஒருவர் இரு மகன்களுக்குத் தாயான கௌரி மோகன். உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றதலிருந்து தம் மூத்த மகன் கிஷோர் மனத்தளவில் பாதிப்படைந்ததைப் போன்று தோன்றுவதாகவும் பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வை முடித்தவுடன் தாம் விரும்பிய உயர்நிலைப்பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று எண்ணிய அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மேலும் தமது நண்பர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்குச் சென்றுவிட்டதால், இவருக்குத் தனித்துவிடப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.
கிஷோர் ஆண்கள் மட்டும் பயிலும் தொடக்கப்பள்ளியில் படித்தவர். உயர்நிலைப்பள்ளியோ இரு பாலரும் படிக்கும் பள்ளி. அந்த மாற்றமும் அவரை மனத்தளவில் வதைத்துள்ளது. "என் மகன் இந்தப் பள்ளியின் சூழலை விரும்பவில்லை என்பது அவன் முகத்திலேயே தெரிந்தது. ஆனால் அப்படியே விட்டுவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்," என்று கூறிய கௌரி, தமது மகனுடன் நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறினார்.
மேலும், பள்ளியில் அவனது சக மாணவர்களின் பெற்றோருடன் தொடர்புகொண்டு தங்கள் பிள்ளைகளைப்பற்றிச் பேசத் தொடங்கினார்.
பெற்றோரின் நட்பு பிள்ளைகளுக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. ஓரிரு வாரங்களில் கிஷோரிடம் தெரிந்த மாற்றங்கள் மனங்குளிரச் செய்ததாகக் கூறினார் கௌரி. வலுவான நட்பு வட்டத்தை மாணவர்கள் உருவாக்கிக்கொள்வது சாலச் சிறந்தது. அதுவே கல்விப் பயணத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கும் முக்கியமான அணுகூலங்களில் ஒன்று.

