எதிர்காலத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்த கூடுதல் ஆதரவு

எதிர்காலத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்த கூடுதல் ஆதரவு

2 mins read
003ed61d-fe4e-413a-ba74-a044425fca0a
-

உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் தொழில் குறித்து ஆலோசனைகளைப் பெறும் வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளன. அதிவேகமாக மாறிவரும் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கிடையே இந்த மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய மேம்பாடுகளின் ஒரு பகுதியாக இரண்டு உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஓர் ஆலோசகர் இந்த ஆண்டுமுதல் சேவையாற்றுவார்கள். இதுவரை நான்கு உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஓர் ஆலோசகர் என்ற நிலையே இருந்தது.

கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலால் வாழ்க்கைத் தொழில், வேலை வாய்ப்புகள் குறித்த எதிர்காலத் திட்டங்களுக்கு நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக வேலைச்சந்தையில் நுழையும் புதிய பட்டதாரிகளுக்கு இந்தக் கவலை உள்ளது.

பள்ளிகளில் உள்ள மாணவர் நல அதிகாரிகளும் இரு மடங்காக்கப்படுவதும் மாற்றம் காணும் கூறுகளுள் குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்படக்கூடிய மாணவர்களுக்குக் கூடுதல் ஆதரவை வழங்கவே இந்த மாற்றம் செயற்படுத்தப்படுகிறது. குறைந்த வருமானமுள்ள குடும்பங்கள், மணமுறிவு பெற்றுள்ள பெற்றோர்கள், சண்டையிடும் குடும்ப உறுப்பினர்கள், இடவசதி இல்லாத வீட்டில் தங்குவோர் என சமூகத்தில் பல சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்குப் பள்ளி ஆலோசகர்களும் மாணவர் நல அதிகாரிகளும் பேருதவியாக இருந்துவருகின்றனர்.

பள்ளிக்குத் தொடர்ந்து வர இயலாத மாணவர்கள் தொடங்கிப் பல சிரமங்களை எதிர்நோக்குபவர்களுக்கு இந்த மேம்பாடுகள் பல வழிகளில் உதவ இயலும்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இந்த மாற்றங்கள் கட்டம் கட்டமாக செயற்படுத்தப்படும்.

பள்ளி ஆலோசகர்களும் மாணவர் நல அதிகாரிகளும் சார்புநிலைக் கல்வியாளர்கள் என்ற ஒரே கூரையின்கீழ் வருவர். ஆக, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அதற்கான உடனடி வழிகள் உண்டு என்பதை இந்த மாற்றங்கள் உறுதிசெய்கின்றன.

மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளாலும் குடும்ப விவகாரங்களாலும் பாதிக்கப்பட்டோரும் இதன்வழி உதவிபெற வழியுண்டு. மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டு இந்த கட்டமைப்புகளைக் கல்வி அமைச்சு உருவாக்கி மேம்படுத்திவருகிறது.