சிறந்த நேர நிர்வாகம் வெற்றிக்கு வித்திடும்

சிறந்த நேர நிர்வாகம் வெற்றிக்கு வித்திடும்

2 mins read
1520af90-e016-4507-b419-dac9ce29aeca
-

அன்றாட வாழ்வில் எதையுமே வீணாக்கக் கூடாது என்பது நாம் யாவரும் அறிந்ததே. பணம், பொருள், தண்ணீர், மின்சாரம் என எதையுமே வீண் செய்வதில் எந்த நன்மையும் கிடையாது. அந்த வரிசையில் நேரமும் அப்படித்தான். நேரம் கடந்துவிட்டால் மீண்டும் கிடைக்காது.

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்களும் தங்கள் நேரத்தை முறையாக நிர்வகித்தாலே அவர்களுக்கு வெற்றி கிட்டும் சாத்தியம் அதிகரிக்கிறது. அனைவருக்குமே ஒரு நாளில் 24 மணி நேரம் இருக்கிறது என்றாலும் அதைச் சரிவர நிர்வகிப்பவர்களால் நிறையச் செயல்களை நிறைவேற்ற முடியும் என்பதில் ஐயமில்லை. அதற்குத் தக்க சான்றாக விளங்குகிறார் உயர்நிலை இரண்டில் பயிலும் ‌‌ஷஹிரா ஃபாத்திமா.

தமது தொடக்கப்பள்ளியிலும் சரி உயர்நிலை ஒன்றிலும் கூட நேரத்தைப் பொருட்படுத்தாமல் செயற்படுவதே அவருக்கு வழமையாக இருந்தது.

"எத்தனை மணி நேரம் படிக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது. கொடுக்கும் வேலைகளை எப்படியோ முடித்துவிடுவேன். முழுக் கவனம் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. சிறப்பான முயற்சியை எடுப்பேன் என்றும் சொல்லமாட்டேன்," என்று சென்ற ஆண்டுவரையில் தமது போக்கைப்பற்றி விளக்கினார் ‌‌ஷஹிரா.

ஆனால், சென்ற ஆண்டு அவரது தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி அவருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதுவரை செய்ததில் என்ன தவறு என்றும் அதை எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சிந்தித்தார். "நான் எந்த வேலையையும் சரியான நேரத்தில் செய்ய வேண்டும். நேர அட்டவணையை உருவாக்கி அதைப் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்," என்றார் அவர்.

இந்த ஆண்டுத் தொடக்கம் முதல் முறையான நேர அட்டவணையை உருவாக்கியுள்ளார் ‌‌‌‌ஷஹிரா.

தினமும் காலை எழுவது முதல் இரவு தூங்கச் செல்லும்வரையில் அவர் என்ன செய்ய வேண்டும் என்பது அந்த நேர அட்டவணையில் உள்ளன. கட்டுக்கோப்பான வாழ்க்கைமுறையையும் பின்பற்றிவரும் ‌‌ஷஹிரா தற்போது தமது கல்வியிலும் வாழ்விலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதை உணர்கிறார்.

அனைவரும் இது போன்ற நேர நிர்வாகத்தைப் பின்பற்றுவதே சாலச் சிறந்தது என்று கூறும் அந்த இளையர் இந்த முறையை வாழ்வு முழுதும் பின்பற்ற உறுதிபூண்டுள்ளார். வாழ்வில் எந்த நிலையிலும் வெற்றிக்கு முதல்படி இதுவே என்று அவர் நம்புகிறார்.