இந்த ஆண்டு உயர்நிலை ஒன்றில் பயிலும் சரண்ராஜ் வேல்ராஜ் பள்ளியில் சேர்ந்ததுமே துணைப்பாட நடவடிக்கையாகச் செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்வது என்று திட்டவட்டமாக முடிவெடுத்திருந்தார்.
தமது மூத்த சகோதரர் மூன்று ஆண்டுகளுக்கும் முன்னர் உயர்நிலை ஒன்றில் சேர்ந்தபோது துணைப்பாட நடவடிக்கைகள் குறித்து வீட்டில் பெற்றோர்களுடன் கலந்துபேசியதை நினைவுகூர்ந்தார் சரண்ராஜ், அப்போது பெற்றோர் கூறியிருந்த ஆலோசனைகளின் அடிப்படையில் தம் விருப்பத்தெரிவைக் கொண்டிருந்தார்.
துணைப்பாட நடவடிக்கையைத் தேர்ந்தெடுக்கும்போது தமக்கு முக்கியமாக எந்தெந்தத் துறைகளில் ஆர்வம் மிகுதி என்பதை ஆராய்ந்தார். அதன்பிறகு நான்காண்டுகளுக்கு அந்தத் துணைப்பாட நடவடிக்கையில் துடிப்பாகச் செயற்படமுடியுமா என்பதை எண்ணிப் பார்த்தார்.
மேலும், அந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் எவ்வாறு தம் திறன்களை வளர்க்கக்கொள்ள இயலும் என்பதை ஆராயவேண்டும் என்றும் தமது பெற்றோர் வலியுறுத்தியது சரண்ராஜின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது. "மற்றவர்களுக்கு உதவுவதில் எனக்குத் தனி ஈடுபாடு உண்டு. அதனால் செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து எனது விருப்பத்தைச் சிறந்த முறையில் செயற்படுத்தலாம் என்று நான் முடிவெடுத்தேன்," என்றார் சரண்ராஜ்.
தம் சகோதரர் பல வாரங்கள் கடினப்பட்டு முடிவெடுத்ததைவிடத் தாம் சில நாள்களிலே தெளிவாக முடிவெடுத்தைப் பற்றிப் பெருமிதத்தோடு குறிப்பிட்டார் சரண்ராஜ். "என்னைப் போன்றே உயர்நிலை ஒன்றுக்கு வரும் எல்லா மாணவர்களும் தங்களுக்கு ஏற்ற துணைப்பாட நடவடிக்கையை நன்கு சிந்தித்துத் தெளிவான முறையில் தேர்ந்தெடுப்பது சிறப்பு," என்று விளக்கினார் அவர்.
பல துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த ரூபன் கணேஷ், வெவ்வேறு நடவடிக்கைகளிலும் தாம் சேரவேண்டும் என்று எண்ணியிருந்தார். ஆனால், பல துணைப்பாட நடவடிக்கைகளில் ஒரே நேரத்தில் ஈடுபடுவதினால் ஏட்டுக்கல்வியில் போதிய கவனம் செலுத்த இயலுமா என்று தமது ஆசிரியர் எழுப்பிய கேள்விக்குப் பதில் தெரியாமல் தடுமாறினார். அதன் பிறகு, காற்பந்து விளையாட்டைத் தேர்ந்தெடுத்து இப்போது அதில் துடிப்புடன் செயற்படுகிறார்.
மாணவர்கள் ஆழமாகச் சிந்தித்துத் தங்களுக்கு விருப்பமான துணைப்பாட நடவடிக்கையில் சேர்ந்து பலன்பெறவேண்டும். தங்களுக்கு ஆர்வமான நடவடிக்கைகளைச் சீர்தூக்கிப் பார்த்து ஏதாவது ஒன்று அல்லது இரண்டு நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது சிறந்த பலனைத் தரும் என்று அவரது ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.
துணைப்பாட நடவடிக்கைகள் மாணவர்களின் முழுமையான திறன் வளர்ச்சிக்கு அவசியமானவை என்றும் பள்ளிக்கூடங்களில் ஏட்டுக்கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமே மாணவர்களின் நோக்கமாக இருத்தல் கூடாது என்றும் கூறினார் வேல்ராஜ்ஜின் ஆசிரியர். மேலும் நல்ல பண்புநலன்களைக் கைவரப்பெறவும் நற்சிந்தனை கொண்டு பொறுப்புணர்வுமிக்க குடிமக்களாக வளரவும் துணைப்பாட வகுப்புகள் மாணவர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன என்றும் அவர் கூறினார்.

