இன்றைய இளம் தலைமுறையினரும் தொழில்நுட்பத்தின் துணையுடன் வளர்கின்றனர். இன்று பள்ளிகளில் பாடத்திட்டமும் பயிற்றுமுறைகளும் இந்தத் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளன.
குறிப்பாக, பள்ளிகள் மாணவர்களிடையே தொழில்நுட்பத் திறன் வளர்ச்சியைப் பெரிதும் ஊக்குவிக்கின்றன. அந்த வகையில் அதிகமான உயர்நிலைப் பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
'கோடிங்' எனப்படும் குறியீடுகளைத் தயாரிப்பதில் ஆர்வமுடைய மாணவர்கள் இந்தப் பாடத்தைப் பயின்று 'ஓ' நிலைத் தேர்வை எழுதலாம். குறியீடு தயாரிப்பதில் திறனாளர்களை வளர்க்க இந்தப் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதாகச் சென்ற ஆண்டு மார்ச்சு மாதம் அன்றைய கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 30 உயர்நிலைப் பள்ளிகளில் இந்தப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டுமுதல் படிப்படியாக மேலும் பல பள்ளிகளில் இப்பாடம் அறிமுகம் காணும். இதுவரை 10 தொடக்கக் கல்லூரிகளிலும் வழங்கப்படும், மேல்நிலைத் தேர்வில்' மாணவர்கள் இப்பாடத்தில் தேர்வு எழுதவும் இயலும். மின்னிலக்கக் கல்வியறிவை மாணவர்களிடையே வலுப்பெறச்செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.
மெய்நிகர் நுண்ணறிவு உள்ளிட்ட இதர தொழில்நுட்ப மேம்பாடுகளிலும் மாணவர்களுக்கு நல்ல புரிந்துணர்வு ஏற்படுத்தவேண்டும் என்னும் இலக்கைக் கொண்டு உயர்நிலை 1, 2 மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திட்டம் இந்த ஆண்டு மறுஆய்வு செய்யப்பட்டுச் செயற்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பக் கட்டத்திலேயே மாணவர்களுக்கு இந்தத் துறைகளில் ஆர்வத்தை வளர்க்கவும் அனுபவத்தை வழங்கவும் இந்த மாற்றங்கள் உதவும் என்று அமைச்சர் ஓங் கூறியிருந்தார். அந்த வரிசையில் 2028ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளி மாணவருக்கும் 'ஐபேட்' போன்ற மின்னிலக்கச் சாதனம் இருப்பது உறுதிசெய்யப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சு செயற்படுத்தவிருக்கும் தேசிய மின்னிலக்கக் கல்வியறிவுத் திட்டத்தின்கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. சென்ற ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிப் பள்ளிகள் படிப்படியாக இந்தத் திட்டத்தில் இணையும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
வருமானம் குறைந்த குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு மின்னிலக்கச் சாதனம் வாங்க ஆதரவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் எடுசேவ் நிதியில் $200 வெள்ளி கூடுதலாக வழங்கப்படும். மின்னிலக்கச் சாதனங்களை அவர்கள் வாங்கிக்கொள்ள இந்நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
''நாம் இன்று தொழில்நுட்ப யுகத்தில் வாழ்கிறோம். நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியும் மாற்றமும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. நாம் அதற்கு இயைந்து வாழப் பழகிக்கொள்வது அவசியமாகும்,'' என்று கூறுகிறார் உயர்நிலை ஒன்றில் பயிலும் நிதேஷ் மாதவன்.

