சவால்களைக் கடந்த கற்றல் அனுபவம்

சவால்களைக் கடந்த கற்றல் அனுபவம்

2 mins read
0a186704-b8e2-49ad-b69a-7583efcaed4a
-

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொவிட்-19 நோய்ப் பரவல் சூழல் பல புதிய அனுபவங்களை அனைவருக்கும் கொண்டுவந்து சேர்த்தது. பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களும் கற்கும் மாணவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. வீட்டிலிருந்தபடியே கல்வி கற்கும் முறை தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டது.

அனைவருக்கும் புதிய அனுபவமாக அமைந்தது. திடீரென்று ஏற்பட்ட நோய்ப்பரவல் சூழல்களால் பல இடையூறுகளும் உயிரை அச்சுறுத்தும் சம்பவங்களும் நாட்டில் உருவாகியுள்ளது. இதனால், பள்ளிக்கூடங்களின் இயல்பான நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலைகளால் ஏற்படும் மாற்றங்களை ஏற்பதும் அவற்றிற்கேற்றவாறு நம் செயற்பாடுகளை மாற்றியமைத்துக்கொள்வதும் முக்கியமாகும். அதற்கான தயார்நிலையில் அனைவரும் இருப்பதும் அவசியமாகும்.

கல்வி அமைச்சு பல வழிகளில் இதுபோன்ற மாற்றங்களுக்குத் தன்னைத் தயார்படுத்தி வருகிறது. மாணவர்களும் பெற்றோர்களும் இதுபோன்ற சூழல்களுக்குத் தயாராகவேண்டும் என்று கூறுகிறார் 42 வயது கணே‌ஷ்குமார் செல்வம். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செயற்படுத்தப்பட்ட வீட்டிலிருந்தபடியே கல்வி கற்கும் முறைக்கு தமது பிள்ளைகள் தயார்படுத்துவதில் அவர் சிரமத்தை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டார்.

"வீட்டில் கணினி, மடிகணினி இருந்தாலும் பிள்ளைகளின் மனநிலைதான் முக்கியமானது," என்றார் அவர். தொடக்கநிலை இறுதியாண்டில் பயின்ற தமது மகளால் கவனம் செலுத்திப் படிக்கமுடியவில்லை என்ற ஏக்கமும் அச்சமும் கணே‌ஷ்குமாரை வாட்டியது. "சில வாரங்கள் கழித்தே இந்தப் புதிய கற்கும் முறையை என் மகள் ஏற்றுக்கொண்டாள். அவ்வேளையில் பெற்றோர்களான நாங்களும் அவளுக்கு ஊக்கமளிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தோம்," என்றார் அவர்.

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மூத்த மகனும் தட்டுத் தடுமாறிப் படித்ததை அவர் கவனித்தார். "இது அனைவருக்கும் நல்ல பாடம். ஆசிரியர்களே பிள்ளைகளின் கல்வியைக் கவனித்துக்கொள்வார்கள். பிள்ளைகளும் தினசரி பள்ளிக்கூடத்திற்குச் சென்றுவந்தால் போதும் என்று இலேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது," என்றார் அவர். எந்த இடையூறு வந்தாலும் அனைத்தையும் சமாளித்துக் கல்வி கற்கவேண்டும் என்பதில் எல்லா மாணவர்களும் தயாராக இருக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் சவால்கள் நம்மைச் சூழ்ந்தாலும் அவற்றை எதிர்கொள்வதில்தான் நமது வெற்றி உள்ளது என்றார் தொழில்நுட்பத்தைக் கொண்டு கற்றல் வளங்களைத் தயாரிக்கும் திரு சோமசுந்தரம். கடந்த காலத்தில் சார்ஸ், தற்போது கொவிட்-19, எதிர்காலத்திலும் வேறு எந்தச் சவாலும் நம்மை நோக்கி வரலாம் என்றும் எதற்கும் தயாராக நாம் இருக்கவேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.