புதிய பயணத்திற்கு முழுமூச்சாகத் தயாராகும் மாணவர்கள்

புதிய பயணத்திற்கு முழுமூச்சாகத் தயாராகும் மாணவர்கள்

2 mins read
365abea2-093f-4f44-9544-4cb9aa811503
புதிய பள்ளி நண்பர்களுடன் நட்புறவாடும் மாணவர்கள். -

தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வை முடித்த மாணவர்கள் கல்விப் பயணத்தின் அடுத்த கட்டத்திற்குத் தயார்ப்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்துவது இயல்பு. ஒவ்வொரு நிலையும் அதற்குரிய சவாலைக் கொண்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஒவ்வோர் ஆண்டும் தங்கள் கல்வி நிலை உயர, மாணவர்கள் தங்களுக்கு அறிவு வளர்ச்சியும் முதிர்ந்த சிந்தனையும் இருப்பதை உணர்வார்கள். அந்த வரிசையில் உயர்நிலை ஒன்றுக்குச் செல்லவிருக்கும் மாணவி அபிராமி முத்துசாமி தமது ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் இணைந்து தாம் சந்திக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து ஆலோசனை பெற்றுத் தயார்நிலையில் உள்ளார்.

முதலாவதாக அவரது பாடத்திட்டம் எந்த அளவு மாறுபடும் என்றும் அந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதையும் அவர் ஆராய்ந்தார். "தினமும் நேர அட்டவணையைப் பார்த்து அதைப் பின்பற்ற வேண்டும் என்று என் அம்மா எனக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களைக் காலம் தாழ்த்தாமல் உடனே செய்து முடிப்பது, பள்ளியில் படிப்பதை வீட்டிற்கு வந்து நினைவுகூர்வது என்று நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்," என்று அபிராமி தெரிவித்தார். இது போன்றே அனைத்து வேலைகளையும் சரிவரச் செய்தோமேயானால் கல்வியில் படிப்படியாக உயரவும் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்தவும் இயலும் என்றார் அவர்.

தம்மோடு தமது நெருங்கிய ஐந்து நண்பர்களும் அவ்வாறே செய்வதாகக் கூறினார் அபிராமி. "நாங்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்டு அவற்றைப் பின்பற்றுகிறோம். நாங்கள் அனைவருமே வெவ்வேறு உயர்நிலைப்பள்ளிக்குச் செல்கிறோம். இந்த நட்பு வளர வேண்டும் என்று எண்ணும் அதே சமயம் புதிய பள்ளியில் புதிய நட்பு வட்டத்தையும் நாம் வளர்க்க வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று கூறினார் அந்த 13 வயது சிறுமி.

வீட்டின் மூத்த பிள்ளையான அபிராமிக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அவர்களுக்கும் முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்னும் விருப்பமும் அபிராமிக்கு உண்டு. சகோதரர்கள் மட்டுமல்லாமல் நண்பர்களும் அபிராமியின் செயலைப் பின்பற்றுவதில் தயக்கம் காட்டியதில்லை. நன்கு சிந்தித்துப் பகுத்தறிந்து முடிவெடுக்கும் குணம் சிறு வயதிலேயே அபிராமிக்கு உண்டு. அவரைப் போன்றே மாணவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.