உடலும் உள்ளமும் பேணத் துடிப்பான வாழ்க்கைமுறை அவசியம்

உடலும் உள்ளமும் பேணத் துடிப்பான வாழ்க்கைமுறை அவசியம்

2 mins read
044180b8-5106-42ab-86f5-ca57edbb5737
-

உடல் ஆரோக்கியத்திற்கும் உள்ளம் நிம்மதியாக இருக்கவும் துடிப்பான வாழ்க்கைமுறை முக்கியம் என்பதை நிபுணர்கள் நமக்கு வலியுறுத்தியுள்ளனர். சிறு வயது முதலே அந்த வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவது நற்பலன்களைத் தரும். பள்ளிகள் அதற்கான நல்ல தளமாகவும் அமைகின்றன. வகுப்பறைகளைத் தாண்டிப் பள்ளியில் பல நடவடிக்கைகளில் ஈடுபட மாணவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. அதற்கான வளங்கள் ஏராளமாக உள்ளன.

தொடக்கநிலைக் கல்வியை முடித்தபின் உயர்நிலைக்குச் செல்லும் மாணவர்கள் ஏட்டுக்கல்வியில் சிறந்தோங்க அதிக நேரத்தை ஒதுக்குவார்கள். அதோடு துணைப்பாட வகுப்புகள் போன்றவற்றிலும் கவனம் செலுத்துவார்கள். அதைப் போன்றே நம்மைச் சுற்றியுள்ள வளங்களைக் கொண்டு துடிப்பான வாழ்க்கைமுறையையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார் உயர்நிலை ஒன்றாம் வகுப்பில் பயிலும் ஜோ‌ஷுவா சரவணன்.

"உயர்நிலைப்பள்ளியில் அடியெடுத்து வைத்தவுடன் அதிக நேரம் அமர்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளியில் வகுப்பு நேரமும் அதிகம். பின்னர், துணைப்பாட வகுப்புகள், வீட்டுப்பாடம் என உட்கார்ந்துகொண்டே செய்ய வேண்டிய வேலைகள் அதிகம். அதனால், இருக்கும் மீதமுள்ள நேரத்தில் உடலுக்கு வேலை கொடுக்கும் நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்," என்றார் அந்த இளையர்.

"இணைப்பாட நடவடிக்கையாக விளையாட்டை நான் தேர்வுசெய்ததற்கும் இதுவே காரணம். காற்பந்துக் குழுவில் சேர்ந்துள்ளேன். மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்க இது உதவுகிறது," என்றும் கூறினார் ஜோ‌ஷுவா.

அத்துடன் பள்ளிக்கு நடந்தே செல்வதும் அவரே எடுத்துள்ள முடிவு. பொங்கோல் வட்டாரத்தில் வசிக்கும் ஜோ‌ஷுவா பேருந்தில் பள்ளிக்குச் சென்றால் 10 நிமிடங்கள் ஆகும். மூன்று பேருந்து நிறுத்தங்களே அவரது வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையில் உள்ளன.

இருப்பினும், நடந்தே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்து 20 நிமிடங்களுக்குள் பள்ளிக்குச் சென்றுவிடுகிறார் அவர். "இது போன்ற செயல்களால் துடிப்புமிக்கவராக என்னால் இருக்க முடிகிறது," என்கிறார் ஜோ‌ஷுவா. நாம் அனைவரும் மிதிவண்டி ஓட்டுவது, நடந்து செல்வது என துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்றினால் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது அவரது எண்ணம்.