ஆறாண்டுகள் தொடக்கப்பள்ளியில் படிக்கும்போது சக மாணவர்களின் நட்பை வலுப்படுத்திக்கொண்ட பின்னர், உயர்நிலைப்பள்ளிக்கு எவருமே சேர்ந்து செல்லவில்லை என்றால் மாணவர்கள் சிலருக்கு உலகமே இருண்டது போன்ற உணர்வு ஏற்படுவதாகக் கூறுகிறார் மனநல ஆலோசகர் திவ்யா நாதன்.
உயர்நிலை ஒன்றில் பயிலும் மாணவர்களுள் சிலர் பள்ளி தொடங்கிய சில வாரங்களுக்கு அமைதியாக இருப்பார்கள் என்று அவர் கூறினார். புதிய நட்பு வட்டத்தைப் பிள்ளைகள் உருவாக்கிக்கொள்ளப் பெற்றோர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
அவரை அணுகியவர்களுள் ஒருவர், இரு மகன்களுக்குத் தாயான கௌரி மோகன். தமது மூத்த மகன் கிஷோர் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றவுடன் மனதளவில் பாதிப்படைந்ததைப் போன்று தோன்றுவதாகவும் அவர் பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வை முடித்தவுடன் தாம் விரும்பிய உயர்நிலைப்பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணிய அவருக்கு ஏமாற்றம் மிஞ்சியுள்ளது. அவரது நண்பர்களும் வெவ்வேறு பள்ளிகளுக்குச் செல்ல, அவருக்குத் தனியே இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், தொடக்கப்பள்ளியில் அவர் ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளியில் படித்தவர். உயர்நிலைப்பள்ளியோ இருபாலாரும் படிக்கும் பள்ளி.
இந்த மாற்றமும் அவரை மனத்தளவில் பாதித்துள்ளது. "என் மகன் இந்தப் பள்ளியின் சூழலை விரும்பவில்லை என்பது அவன் முகத்திலேயே தெரிந்தது. ஆனால், அப்படியே விட்டுவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்," என்று கூறிய கௌரி, தமது மகனுடன் உயர்நிலைப்பள்ளி வாழ்க்கையைப்பற்றி உரையாடத் தொடங்கினார். அத்தோடு, தம் மகனின் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுடன் தொடர்புகொண்டு பிள்ளைகளைப்பற்றிப் பேசத் தொடங்கினார்.
பெற்றோரின் நட்பு பிள்ளைகளுக்கிடையில் நெருக்கத்தை ஏற்படுத்தியது. ஓரிரு வாரங்களில் கிஷோரிடம் தெரிந்த மாற்றங்கள் மனங்குளிரச் செய்ததாகக் கூறினார் கௌரி. வலுவான நட்பு வட்டத்தை மாணவர்கள் உருவாக்கிக்கொள்வது சாலச் சிறந்தது. அதுவே கல்விப் பயணத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கும் பலன்களுள் ஒன்று.
எளிதில் புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் படைத்தவர் ஷாஹுல் ஹமீது. உயர்நிலை மூன்றில் பயிலும் அவர் உயர்நிலைப்பள்ளிக்கு வந்தவுடன் தமது நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொண்டதை நினைவுகூர்ந்தார். "நல்ல நண்பர்கள் இருப்பது அவசியம். நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்பது நான் பள்ளிக்கு வருவதற்குரிய ஆர்வத்தைத் தூண்டும் அம்சங்களுள் ஒன்று. மேலும், உதவி தேவைப்பட்டால் நண்பர்கள் உடனே வந்து உதவி செய்வார்கள்," என்றார் அவர்.

