வெற்றிக்கு முதற்படி முறையான நேர நிர்வாகம்

வெற்றிக்கு முதற்படி முறையான நேர நிர்வாகம்

2 mins read
9c94931a-0563-436e-a7b8-63cb06ca93a6
-

வாழ்வின் அனைத்து நிலைகளில் உள்ளவர்களும் தங்கள் நேரத்தை முறையாக நிர்வகித்தால் வெற்றி கிட்டும் சாத்தியம் அதிகரிக்கும். அனைவருக்குமே ஒரு நாளில் 24 மணி நேரம் இருக்கிறது என்றாலும் அதைச் சரியாக நிர்வகிப்பவர்களால் மட்டுமே அதிகச் செயல்களை முடிக்கமுடியும் என்பதில் ஐயமில்லை. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார் உயர்நிலை இரண்டில் பயிலும் ‌‌ஷஹிரா ஃபாத்திமா.

தமது தொடக்கநிலைக் கல்வியிலும் சரி உயர்நிலை ஒன்றிலும் கூட நேரத்தைப் பொருட்படுத்தாமல் செயற்படுவதே அவருக்கு வழக்கமாக இருந்தது. "எத்தனை மணி நேரம் படிக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது.

கொடுக்கும் வேலைகளை எப்படியோ முடித்துவிடுவேன். முழுக் கவனம் இருக்கும் என்றும் சொல்லமுடியாது. சிறப்பான முயற்சியை எடுப்பேன் என்றும் சொல்லமாட்டேன்," என்று சென்ற ஆண்டுவரையில் அவரது போக்கைப்பற்றி விளக்கினார் ‌‌ஷஹிரா.

-

ஆனால், சென்ற ஆண்டு தமது தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி அவருக்குத் தக்க விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதுவரை தாம் செய்ததில் என்ன தவறு இருக்கிறது என்பதைப்பற்றியும் அவற்றை எவ்வாறு மாற்றிக்கொள்ளவது என்பதைப்பற்றியும் அவர் சிந்தித்தார்.

"நான் எந்த வேலையையும் சரியான நேரத்தில் செய்யவேண்டும் என்பதிலும் நேர அட்டவணையை உருவாக்கி நேர்த்தியுடன் அவற்றைச் செய்யவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தேன்," என்றார் அவர். இந்த ஆண்டுத் தொடக்கம்முதல் முறையான நேர அட்டவணையை உருவாக்கியுள்ளார் ‌‌‌‌ஷஹிரா.

தினமும் காலை எழுவது முதல் இரவு தூங்கச் செல்லும்வரையில் அவர் என்னென்ன செய்யவேண்டும் என்பது அந்த நேர அட்டவணையில் உள்ளன. கட்டுக்கோப்பான வாழ்க்கைமுறையையும் பின்பற்றிவரும் ‌‌ஷஹிரா, தற்போது தமது கல்வியிலும் வாழ்விலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் அடைந்துள்ளதை உணர்கிறார்.

-

அனைவரும் இதுபோன்ற நேர நிர்வாகத்தைப் பின்பற்றுவதே சாலச் சிறந்தது என்று கூறும் அந்த இளையர் இந்த முறையைத் தம் வாழ்நாள் முழுதும் பின்பற்ற உறுதிபூண்டுள்ளார்.

வாழ்வில் எந்த நிலையிலும் வெற்றிக்கு முதற்படி இதுவே என்று அவர் நம்புகிறார்.