தொடர்ந்து வளர்ந்துவரும் தொழில்நுட்பத்துடன் இணைந்து நாம் வாழ்ந்துவரும் இந்தக் காலக்கட்டத்தில் அந்த வளர்ச்சியை அரவணைத்து வாழத் தயாராக இருக்கவேண்டும். பள்ளிகளில் பாடத்திட்டமும் இந்த மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாணவர்களைத் தயார்படுத்துகின்றன.
அதில் முதன்மையாகத் தொழில்நுட்பத் துறையில் திறன்வளர்ச்சியை ஊக்குவித்தல் என்பதைக் குறிப்பிடலாம். அந்த வகையில் அதிகமான உயர்நிலைப்பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
'கோடிங்' எனப்படும் குறியீடுகளைத் தயாரிப்பதில் ஆர்வமுடைய மாணவர்கள் இந்தப் பாடத்தைப் பயின்று 'ஓ' நிலைத் தேர்வை எழுதலாம். குறியீடு தயாரிப்பதில் திறனாளர்களை வளர்க்க இந்தப் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதாக சென்ற ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 30 உயர்நிலைப்பள்ளிகளில் இந்தப் பாடம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மேலும் பல பள்ளிகளில் இது அறிமுகம் காணும். இதுவரை 10 தொடக்கக் கல்லூரிகளில் இந்தப் பாடம் வழங்கப்படுகிறது. 'ஏ' நிலையில் மாணவர்கள் இதனைத் தேர்வுப் பாடமாகவும் பயில முடியும்.
மின்னிலக்கக் கல்வியறிவை மாணவர்களிடையே வலுவடைய செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. மெய்நிகர் நுண்ணறிவு உள்ளிட்ட இதர தொழில்நுட்ப மேம்பாடுகளில் மாணவர்களுக்கு நல்ல புரிந்துணர்வு ஏற்படவேண்டும் என்ற இலக்கைக்கொண்டு உயர்நிலை 1, 2 மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தின் பாடத்திட்டம் இந்த ஆண்டு மறுஆய்வு செய்யப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பக் கட்டத்திலேயே மாணவர்களுக்கு இந்தத் துறைகளில் ஆர்வத்தை வளர்க்கவும் அனுபவத்தை வழங்கவும் இந்த மாற்றங்கள் உதவும் என்று அமைச்சர் ஓங் கூறியிருந்தார்.
அந்த வரிசையில் 2028-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வோர் உயர்நிலைப்பள்ளி மாணவருக்கும் 'ஐபேட்' போன்ற மின்னிலக்கச் சாதனம் இருப்பது உறுதிசெய்யப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சு செயற்படுத்தவிருக்கும் தேசிய மின்னிலக்கக் கல்வியறிவுத் திட்டத்தின்கீழ் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. சென்ற ஆண்டு ஜூன் மாதம் முதல் பள்ளிகள் படிப்படியாக இந்தத் திட்டத்தில் இணைந்து செயற்படுகின்றன என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

