உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் தொழில் குறித்த ஆலோசனைகளைப் பெறும் வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளன. அதிவேகமாக மாறிவரும் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கிடையே இந்த மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய மேம்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த ஆண்டுமுதல் இரண்டு உயர்நிலைப்பள்ளிகளுக்கு ஓர் ஆலோசகர் சேவையாற்றுவார்.
இதுவரை நான்கு உயர்நிலைப்பள்ளிகளுக்கு ஓர் ஆலோசகர் மட்டுமே இருந்தார். வாழ்க்கைத் தொழில், வேலை வாய்ப்புகள் குறித்த எதிர்காலத் திட்டங்கள் கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலால் நிச்சயமற்றதாக உள்ளன.
குறிப்பாகப் புதிய பட்டதாரிகளுக்கு இந்தக் கவலை உள்ளது. மாற்றம் காணும் அம்சங்களில் பள்ளிகளில் உள்ள மாணவர் நல அதிகாரிகளும் இரு மடங்காக்கப்படவுள்ளனர். பாதிக்கப்படக்கூடிய மாணவர்களுக்குக் கூடுதல் ஆதரவை வழங்கவே இந்த மாற்றம் செயற்படுத்தப்படுகிறது.
இவ்வாண்டு ஜனவரி மாதம்முதல் இந்த மாற்றங்கள் கட்டம் கட்டமாகச் செயற்படுத்தப்படும்.
பள்ளி ஆலோசகர்களும் மாணவர் நல அதிகாரிகளும் சார்புநிலைக் கல்வியாளர்கள் என்ற ஒரே கூரையின்கீழ் வருவர். ஆக, உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அதற்குச் சரியான வழிமுறைகள் உள்ளன என்பதை இந்த மாற்றங்கள் உறுதிசெய்கின்றன.
மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களும் தனிப்பட்ட அல்லது குடும்ப விவகாரங்களால் பாதிக்கப்பட்டோரும் இதன்மூலம் பலனடையலாம். மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டு இந்தக் கட்டமைப்புகளைக் கல்வி அமைச்சு உருவாக்கி மேம்படுத்திவருகிறது. பள்ளிகளில் கல்வி கற்பதையும் தாண்டி எதிர்காலச் சவால்களுக்கு மாணவர்கள் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.

