தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இடையூறுகளைச் சமாளித்துக் கல்வி கற்கத் தயாராகவேண்டும்

2 mins read
56d23533-9d6a-4a4b-bf94-1f76334f1468
-

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொவிட்-19 நோய்ப் பரவல் சூழல் பல புதிய அனுபவங்களை அனைவருக்கும் வழங்கியுள்ளது. பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களும் கற்கும் மாணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

வீட்டிலிருந்தபடியே கல்வி கற்கும் முறையைத் தேசிய அளவில் அனைவரும் பின்பற்றியது அதில் முக்கிய அம்சம்.

-

பள்ளிக்கூடங்களுக்குச் சென்று கல்வி கற்பது இயல்பான ஒன்று என்றாலும் நோய்ப் பரவல் போன்ற சில இடையூறுகளாலும் சம்பவங்களாலும் இதுபோன்ற மாற்றங்கள் நடக்கலாம். அவ்வாறு ஏற்படும் மாற்றங்களை அரவணைப்பதும் தன்வசப்படுத்திக்கொள்வதும் முக்கியம். அதற்கான தயார்நிலையில் அனைவரும் இருப்பதும் அவசியம்.

கல்வி அமைச்சு பல வழிகளில் இதுபோன்ற மாற்றங்களுக்குத் தயாராகி உள்ளது. மாணவர்களும் பெற்றோர்களும் இதுபோன்ற சூழல்களுக்குத் தயாராகவேண்டும் என்று கூறுகிறார் 42 வயது கணே‌ஷ்குமார் செல்வம். இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான அவர், சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செயற்படுத்தப்பட்ட வீட்டிலிருந்தபடியே கல்வி கற்கும் முறையைத் தமது பிள்ளைகள் பின்பற்றுவதில் சிரமத்தை எதிர்நோக்கினர் என்றார்.

-

"வீட்டில் கணினி, மடிகணினி இருந்தாலும் பிள்ளைகளின் மனநிலைதான் முக்கியமானது," என்றார் அவர்.

தொடக்கநிலை இறுதியாண்டில் பயின்ற தமது மகளால் கவனத்துடன் படிக்க முடியவில்லை என்ற ஏக்கமும் அச்சமும் கணே‌ஷ்குமாரை வாட்டியது. "சில வாரங்கள் கழித்தே இந்தப் புதிய இயல்பை எனது மகள் ஏற்கமுடிந்தது. பெற்றோர்களான நாங்களும் அவளுக்கு ஊக்கமளிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தோம்," என்றார் அவர்.

உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மூத்த மகனும் திக்கித் தடுமாறிப் படித்ததை அவர் கவனித்தார். "இது அனைவருக்கும் நல்ல பாடம். ஆசிரியர்களே பிள்ளைகளின் கல்வியைக் கவனித்துக்கொள்வார்கள். பிள்ளைகளும் தினசரி பள்ளிக்கூடத்திற்குச் சென்றுவந்தால் போதும் என்று இலேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது," என்றார் அவர்.

எந்த இடையூறு வந்தாலும் அனைத்தையும் சமாளித்துக் கல்வி கற்கவேண்டும் என்பதில் எல்லா மாணவர்களும் தயாராக இருக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.