தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வை முடித்த மாணவர்கள், கல்விப் பயணத்தின் அடுத்த கட்டத்திற்குத் தயார்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்துவது இயல்பு.
அந்த வரிசையில் உயர்நிலை ஒன்றுக்குச் செல்லவிருக்கும் மாணவி அபிராமி முத்துசாமி, தமது ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் இணைந்து தாம் சந்திக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து ஆலோசனை பெற்றுத் தயார்நிலையில் உள்ளார்.
முதலாவதாக அவரது பாடத்திட்டம் எந்த அளவு மாறுபடும் என்றும் அந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதையும் அவர் ஆராய்ந்தார்.
"தினமும் நேர அட்டவணையைச் சரிசெய்து பின்பற்றுவது, கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களைக் காலம் தாழ்த்தாமல் உடனே செய்துமுடிப்பது, பள்ளியில் படித்தவற்றைத் தினமும் வீட்டிற்கு வந்து நினைவுகூர்வது முதலிய நல்ல பழக்கங்களை வளர்க்கவேண்டும் என்றும் என் அம்மா எனக்கு அறிவுறுத்தினார்," என்று அபிராமி தெரிவித்தார்.
தம் அம்மாவின் அறிவுரைபோன்றே அனைத்து வேலைகளையும் சரிவரச் செய்தோமேயானால் கல்வி நிலையில் உயர்ந்து செல்லச் செல்ல எளிதாக மாற்றங்களை அரவணைக்க முடியும் என்றார், அவர்.
தற்போது தம்மோடு ஒரே வகுப்பில் பயிலும் ஐந்து நெருங்கிய நண்பர்களும் அவ்வாறே செய்யவிருப்பதாக அபிராமி கூறினார்.
"நாங்கள் ஒருவருக்கொருவர் நல்ல பல ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்டு அவற்றைப் பின்பற்ற எண்ணியுள்ளோம். நாங்கள் அனைவருமே வெவ்வேறு உயர்நிலைப்பள்ளிக்குச் செல்லவிருக்கிறோம்.
எங்கள் நட்பு தொடர்ந்து வளரவேண்டும்; அதே சமயம் புதிய பள்ளியில் புதிய நட்பு வட்டத்தையும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று அபிராமி கூறினார்.
வீட்டின் மூத்த பிள்ளையான அபிராமிக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அவர்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கவேண்டும் என்ற வேட்கையும் அபிராமிக்கு உண்டு.

