பொங்கல் பண்டிகையைத் தமிழர் திருநாள் என்றும் அழைப்பார்கள். இதை நான்கு நாள் பண்டிகையாகக் கொண்டாப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி என்று அழைப்பார்கள். இரண்டாம் நாளான சூரியப் பொங்கலாகவும் மூன்றாம் நாள் மாட்டுப் பொங்களாகவும், நான்காம் நாள் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது.
போகி
'பழையன கழிதலும், புதியன புகுதலும்' தமிழரின் மரபு. மார்கழி மாதத்தின் இறுதி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுகிறார்கள். அந்நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்-களைக் கழித்து, வீட்டை சுத்தமாகத் துடைத்து, வர்ணம் தீட்டி, புதுப் பொலிவோடு மாற்றுவார்கள். இப்படிச் செய்யும் மாற்றம், வாழ்வில் ஏற்றம் தரும் என்பது நம்பிக்கை.
தைப்பொங்கல்
தமிழர் திருநாளாக தமிழர்களாலும், தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளில், அதிகாலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, சூரியனை வழிபட்டு வாசலில் கோலமிட்டு, புதுப்பானை வைத்து, புது அரிசியிட்டு, பொங்க வைப்பார்கள். தலைவாழையிலையில், நிறைகுடம் வைத்து, விளக்கேற்றுவர். கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள், பழங்கள் வைத்து வீட்டில் உள்ள அனைவரும் கூடி நின்று, 'பொங்கலோ... பொங்கல்' என முழக்கம் இடுவர். பின்னர் பொங்கலை உற்றார், உறவினர், சுற்றத்தாருக்குக் கொடுத்து, அதன்பின்னே குடும்பத்தார் உண்பார்கள். 'மகிழ்வித்து மகிழ்' என்னும் தமிழனின் பண்பாட்டை வெளிப்படுத்தும் நிகழ்வு இது
மாட்டுப் பொங்கல்
தமிழனின் உழவுக்கும், தொழிலுக்கும் உறுதுணையாக இருப்பது கால்நடைகளே. அவற்றுக்கு நன்றி கூறும் திருநாளாக இது கொண்டாடப்படுகிறது. அதோடு பண்டைய தமிழனின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டும் அன்று நடைபெறும்.
பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் வயலை உழவும், வண்டி இழுக்கவும், பால், தயிர், நெய் கொடுக்கவும், காரணமாக இருக்கும் எருதுகளையும், பசுக்களையும், கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி, குங்குமம், சந்தனம், மலர் மாலைகளால் அலங்கரிப்பார்கள்.
காணும் பொங்கல்
காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், நடத்துவதுண்டு, குறிப்பாக ஜல்லிக்கட்டு, பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

