இந்த விழாக்காலம் நம்பிக்கையையும் அருளையும் வளப்பத்தையும் அனைவருக்கும் கொண்டு வரட்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்ச் சமூகம் நான்கு நாள் கொண்டாடும் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு முக்கியத்துவமும் வழக்கங்களும் கொண்டது என்று அவர் பொங்கல் விழாவை விளக்கினார்.
பால், அரிசி, வெல்லம் சேர்த்துச் செய்யும் பொங்கல் செழிப்பைக் குறிப்பது என்ற அவர், இந்த ஆண்டு தொற்றுநோய் சூழலால் கொண்டாட்டம் குறைந்து உள்ளது என்றார் பிரதமர் லீ.
எனினும் லிட்டில் இந்தியாவில் பொங்கல் ஒளியூட்டும் https://pongal.sg/ என்ற இணையத்தளத்தில் ஏராளமான நடவடிக்கைகளும் உள்ளன என்றார்.
மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் தைப்பொங்கல் வாழ்த்துகளை ஃபேஸ்புக் வழியாகத் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் வேளாண் சமூகம் இல்லையென்றாலும் இந்த விழா பல பாடங்களைப் கற்பிக்கிறது என்றார் அமைச்சர் விவியன்.
முதலாவது உழைப்பின்றி அறுவடை இருக்காது. இரண்டாவது, அறுவடையின் பலனை குடும்பத்தார், சமூகத்தினர் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றார் அவர்.
தைப்பொங்கல் விழாவை செம்பவாங் தொகுதி மக்களுடன் கொண்டாடுவதை நினைவுகூர்ந்த அமைச்சர் ஓங், மாடுகளைக் காண மக்கள் ஆவலுடன் காத்திருப்பதைக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு பொங்கல் விழாவில் தாமும் பங்கேற்க முடிவதாக அவர் கூறினார். இந்த ஆண்டுக் கொண்டாட்டம் இணையம் வழி நடைபெறுகிறது என்றார் அவர்.

