'தை பிறந்தால் வழி பிறக்கும்' எனும் தங்களது நம்பிக்கைக்கு ஏற்ப, ஓராண்டிற்கு மேலாக மனிதகுலத்தைப் பாடாய்ப்படுத்தி வரும் கொவிட்-19 தொற்றுக்கு அழிவுகாலமாக, தங்களுக்கு விடிவுகாலமாக இவ்வாண்டு பொங்கல் திருநாள் அமையும் எனத் தமிழ்மக்கள் அனைவரும் உறுதியாக நம்புகின்றனர்.
'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று தன் பாட்டிலும் உழவுத்தொழிலுக்கு முதலிடம் தந்தார் மகாகவி பாரதி. உழவில்லையேல் உணவில்லை. இதை உணர்ந்தே, உழவர்கள் மட்டுமின்றி தமிழர்கள் அனைவரும் உழவுத்தொழிலைப் போற்றும் விதமாக பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், சிங்கப்பூரிலும் ஆண்டுதோறும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டும். குறிப்பாக, லிட்டில் இந்தியாவின் சிராங்கூன் சாலையில் கட்டப்படும் ஒளி சிந்தும் வண்ணத் தோரணங்கள் காண்போரிடத்தில் பொங்கல் திருநாள் உற்சாகத்தை ஊற்றெடுக்கச் செய்யும்.
ஆனால், காலங்காலமாகக் கொண்டாடப்பட்டு வரும் அந்த நன்னாளை இம்முறை கொவிட்-19 நோய்ப் பரவல் கட்டுப்பாடுகளால் கோலாகலமாகக் கொண்டாட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இருப்பினும், பிரம்மாண்டமாக இல்லாவிடினும் இம்மாதம் 14ஆம் தேதி வியாழக்கிழமையன்று வரும் பொங்கல் திருநாளைக் கொண்டாட இம்முறை வித்தியாசமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

