'லிஷா' எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் தொடர்ந்து 21வது ஆண்டாக பொங்கல் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஆயினும், கொவிட்-19 பரவல் காரணமாக இவ்வாண்டு கொண்டாட்டம் அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு இணங்க பாதுகாப்பு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் அடங்கிய ஒன்றாக இருக்கும்.
"கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கொண்டாட்டங்களின் பிரம்மாண்டமும் அவற்றில் கலந்துகொள்வோர் எண்ணிக்கையும் குறைவாக இருப்பினும் பொங்கல் திருநாள் உணர்வும் உற்சாகமும் எள்ளளவும் குறையாது," என்றார் 'லிஷா' தலைவர் சி.சங்கரநாதன்.
'லிஷா' தலைமைப் பொறுப்பை ஏற்றபின் திரு சங்கரநாதன் வழிநடத்தவிருக்கும் முதல் பொங்கல் கொண்டாட்டம் இது.
"சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாட்டங்கள் சற்று வேறுபட்டது. பிற இனத்தவரையும் சேர்த்துக்கொண்டு, ஒருங்கிணைந்து கொண்டாடுகிறோம். உணவு உண்ணும் ஒவ்வொருவரும் பொங்கல் திருநாளைக் கொண்டாடலாம். இது இனம், சமயம் சார்ந்ததல்ல என்பது என் கருத்து," என்றார் அவர்.
சிறியவர் முதல் பெரியவர் வரை, பல இனத்தவரும் கலந்துகொண்டு மகிழும்படி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் 'லிஷா' ஏற்பாடு செய்துள்ளது.
"ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்கென மாட்டுத் தொழுவச் சுற்றுலா போன்ற பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகிறோம். இவ்வாண்டிலும் அது தொடரும். தமிழர் திருநாளான பொங்கல் குறித்து இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என நம்புகிறேன்," என்றார் திரு சங்கரநாதன்.
தீபாவளிப் பண்டிகையை கொரோனா தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் கொண்டாடியது போலவே, இப்போது பொங்கல் கொண்டாட்டங்களும் பொதுமக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் மாறுபட்ட ஒன்றாக இருக்கப் போகிறது என்றார் 'லிஷா' ஆலோசகர் திரு ராஜ்குமார் சந்திரா.
இம்மாத இறுதி வரை நீடிக்கும் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் பொதுமக்களையும் வர்த்தகர்களையும் உற்சாகத்துடன் வைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

