தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள், இன, சமயம் பாராது எல்லாராலும் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல்நாள் போகிப் பண்டிகை, பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல், அதற்கு மறுநாள் காணும் பொங்கல் என நான்கு நாள்கள் கோலாகல கொண்டாட்டம் இடம்பெறும்.
அந்நன்னாளில் குடும்பத்தினர், நண்பர்கள், உற்றார் உறவினர்களுடன் இணைந்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதற்காக இங்கு வேலை செய்து வரும் தமிழக ஊழியர்கள் பலரும் சொந்த ஊர் திரும்புவர். ஆனால், இம்முறை கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக அவர்கள் இங்கேயே பொங்கல் திருநாளைக் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
"ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் திருநாளுக்குச் சொந்த ஊர் செல்ல வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் 'தி லியோ' வெளிநாட்டு ஊழியர்கள் விடுதியிலேயே பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறோம். இவ்வாண்டும் அதேபோல பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யவிருப்பதாக விடுதி நிர்வாகி கூறியிருக்கிறார். அந்த நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்," என்றார் எட்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வரும் திரு வி.பிரபாகரன், 31.
சொந்த ஊரையும் குடும்பங்களையும் விட்டு வெளிநாட்டிற்கு வந்து வேலை செய்யும் தம்மைப் போன்றோருக்கு இதுபோன்ற சிறு கொண்டாட்டங்களே ஆறுதல் தருவதாக உள்ளன என்று திரு பிரபாகரன் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டு பலருக்கும் சவால்மிக்கதாக இருந்த நிலையில், இவ்வாண்டில் அனைவருக்கும் நல்ல வழி பிறக்கும் எனும் நேர்மறைச் சிந்தனையுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடவிருப்பதாகவும் அவர் சொன்னார்.
கடந்த மூன்றாண்டுகளாக தமிழகம் சென்று, குடும்பத்தினருடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார் பொங்கோல் பிபிடி விடுதியில் தங்கியிருக்கும் 29 வயது திரு கர்ணன் ராஜா.
ஆனால், இம்முறை பொங்கல் திருநாளுக்குச் சொந்த ஊர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பது தமக்கு வருத்தமளிப்பதாக அவர் சொன்னார்.
"வீடுதோறும் வாசலில் வண்ணக் கோலம், திரும்பும் இடமெல்லாம் தித்திக்கும் செங்கரும்பு, புத்தாடை என ஊரே குதூகலமாக இருக்கும். குடும்பத்துடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடுவதே தனி இன்பந்தான். அது இம்முறை கிடைக்காது. இருப்பினும், எங்கள் விடுதியிலேயே பொங்கல் திருநாளைக் கொண்டாடும் எண்ணம் இருக்கிறது. விடுதியைவிட்டு வெளியே செல்ல அனுமதி இல்லாததால் தேக்கா சென்று பொங்கல் கொண்டாடுவதற்கான பொருள்களை வாங்க முடியாது. அதனால் எங்கள் விடுதியில் இருக்கும் பல்பொருள் அங்காடியிலேயே கரும்பு போன்றவை விற்கப்பட்டால் நன்றாக இருக்கும்," என்றார் திரு ராஜா.

