தொடக்கக் கல்லூரியில் உயர்தரம் 3 தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பாடம் பயில ஆர்வம் மட்டுமே தேவை

தொடக்கக் கல்லூரியில் உயர்தரம் 3 தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பாடம் பயில ஆர்வம் மட்டுமே தேவை

3 mins read
e671a3ab-8de4-408c-aacc-68cf9a75ca55
இந்த ஆண்டு இந்தப் பாடத்தை எடுத்து பயி­லும் ஒரே மாணவி, ஆண்­டர்­சன் -சிராங்­கூன் தொடக்­கக்­ கல்­லூரியைச் சேர்ந்த நந்­தினி. படம்: தமிழ் முரசு -

கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை மொத்­தம் மூன்று மாண­வர்­கள் மட்­டுமே உயர்­தரம் மூன்று தமிழ் மொழி மற்­றும் இலக்­கிய பாடத்தை (H3 TLL) எடுத்துப் பயின்றுள்ளனர் என்று கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்­போது இப்­பா­டம் இரண்டு தொடக்­கல்­லூ­ரி­களில் மட்­டுமே வழங்­க­ப்ப­டு­கிறது. இந்த ஆண்டு இந்தப் பாடத்தை எடுத்து பயி­லும் ஒரே மாணவி, ஆண்­டர்­சன் -சிராங்­கூன் தொடக்­கக்­ கல்­லூரியைச் சேர்ந்த நந்­தினி.

தொடக்­கக்­கல்­லூ­ரி­யில் உயர்­தரம் 2 தமிழ் இலக்­கியப் பாடத்தை பயின்ற இவர், தொடக்­கக்­கல்­லூரி இரண்­டாம் நிலைக்குச் சென்­ற­போது உயர்தரம் (H3) தமிழ்மொழி மற்­றும் இலக்­கிய பாடத்தைத் தனிப் பாட­மா­க­வும் எடுத்து பயின்று வரு­கி­றார். எதிர்­கா­லத்­தில் தமிழ் ஆசி­ரி­ய­ரா­க­வும் தமிழ் எழுத்­தா­ள­ரா­க­வும் ஆக­வேண்­டும் என்ற இலட்­சி­யம் இவருக்கு உண்டு.

"தொடக்­கக் கல்­லூ­ரிக்­குச் செல்­லும் பெரும்­பா­லான மாண­வர்­கள் உயர்­நி­லை­ப் பள்ளியில் உயர்­கல்வி எடுத்­த­தால் தொடக்­கக்­கல்­லூ­ரி­யில் தமிழ்ப் பாடத்தைத் தேர்­வு­செய்­வ­தில்லை.

"பல ஆண்­டு­க­ளாக நிலைமை இப்­படி இருந்­தா­லும் தமிழ் விருப்­பப்­பாடத் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட கடந்த சில ஆண்­டு­களில் உயர்தர தமிழ்ப் பாடங்­களை முன்­வந்து எடுக்­கும் மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை மெல்ல உயர்ந்து வரு­கிறது," என்­றார் ஆண்­டர்­சன்- சிராங்­கூன் தொடக்­கக்­கல்­லூரி தமிழ் ஆசி­ரி­யர் திரு வீர­முத்து கணே­சன்.

தமிழ்மொழி விருப்­பப்­பா­டம் பற்­றிய தக­வல்­கள்:

தமிழ்மொழி­யி­லும் இலக்­கி­யத்­தி­லும் ஆர்­வ­முள்ள மாண­வர்களுக்கு இந்த தமிழ்­மொழி விருப்பப்­பா­டத் திட்­டம் ஆண்­டர்­சன் - சிராங்­கூன் தொடக்­கக்­கல்­லூரி, தேசிய தொடக்­கக்­கல்­லூரி ஆகிய இரண்டு கல்­லூ­ரி­களில் தற்­போது வழங்­கப்­படு­கிறது.

தகுதி பெறும் மாண­வர்­கள் ஜிசிஇ சாதா­ரணநிலை தேர்­வில் பின்­வ­ரும் தரங்­களில் ஏதே­னும் ஒன்­றைப் பெற்ற மாண­வர்­கள்: உயர் தமி­ழில் ≥ தரம் B3, உயர் தமி­ழில் ≥ தரம் B4 மற்­றும் தமிழ் இலக்­கி­யத்­தில் ≥ தரம் B3, தமிழ்ப் பாடத்­தில் தரம் ≥ A2, சாதா­ரணநிலை தேர்வு முடித்த மாண­வர்­கள், கூட்­டுச் சேர்க்கை நட­வ­டிக்கை வழி­யா­கவோ நேர­டிப் பள்ளி நுழை­வுச் சேர்க்கை வழி­யா­கவோ தமிழ் மொழி விருப்பப்பாடம் வழங்கும் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அந்­தந்த பள்­ளி­களில் சேர 2 போனஸ் புள்­ளி­க­ளுக்கு அவர்­கள் தகுதி பெறு­வார்­கள்.

தமிழ்மொழி விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்­யும் மாண­வர்­கள் உயர்தரம் 2 தமிழ் மொழி மற்­றும் இலக்­கிய பாடத்தைக் கட்­டா­ய­மாக எடுத்து பயி­ல­வேண்­டும்.

மாணவர்களுக்கு உயர்தரம் 3 தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பாடத்தையும் பயில வாய்ப்பு தரப்படும்.

சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாகத் தமிழ் மொழி தொடர்ந்து நிலைத்துவருகிறதை அரசு உறுதி செய்யும் அதே வேளை பல துறைகளில் தமிழ் மொழியில் திறன்மிக்கவர்களுக்கான தேவை இருந்துவருகிறது.

"அந்தத் துறைகளில் திறமையானவர்கள் பணியில் சேர நல்ல அடித்தளம் அமைவது சிறப்பு. அதற்கு இன்னும் பல மாணவர்கள் உயர்தரம் 3 தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பாடங்களை எடுத்து படிப்பது நல்லது," என்று கூறினார் தமிழ் மொழி ஆர்வலர் திரு கோவிந்தன் ராஜு.

"எனது பிள்ளைகளுக்குமே இந்த அறிவுரை பொருந்தும். முடிந்தவரை அவர்களைத் தாய்மொழி தமிழில் உயர்தரம் 3 பாடத்தை எடுக்குமாறு கூறுவேன். தமிழ்மொழி இந்நாட்டில் பல காலம் செழித்தோங்க அதற்கு நல்ல திறனாளர்கள் வேண்டும். மேலும் அரசு நல்ல வளங்களை உருவாக்கியுள்ள நிலையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்," என்று உயர்நிலைப் பள்ளியில் பயிலும் இரு மகள்களுக்குத் தந்தையான கோவிந்தன் கூறினார்.