நல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை

1 mins read
04e8562f-0e62-47be-8ff4-bf32ca0e424b
சிண்டா இளம் தலைவர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்ற இளையர்களுடன் சிறப்புப் பேச்சாளரான டிபிஎஸ் குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பியுஷ் குப்தா. படம்: சிண்டா -

வாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாக இருந்தாலும், முக்கியமான பண்புகளை மேம்படுத்துவது, வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துவது போன்ற திறன்கள் அவர்களை நல்ல தலைவர்களாக்கும் என்று டிபிஎஸ் குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பியுஷ் குப்தா கூறியுள்ளார்.

சென்ற மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற சிண்டா இளம் தலைவர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்ற சுமார் 90 மாணவர்களிடையே கலந்துரையாடியபோது இந்தக் கருத்தை திரு குப்தா பகிர்ந்துகொண்டார்.

தலைமைத்துவம் இளையர்கள் மத்தியில் மிகவும் முக்கியம் என்ற கருத்தை கலந்துகொண்டவர்கள் முன்வைத்தனர். அதுவும் இளம் பருவத்திலேயே தலைமைத்துவப் பண்புகள் மட்டுமல்லாமல் பண்புநலன்களையும் அறிந்துகொள்ளவேண்டும் என்றனர் பலர்.

வாய்ப்புகள் இன்றைய சூழலில் மிகுதியாக உள்ளன என்றும் அவற்றைத் தன்வசப்படுத்துவதில் அனைவரும் கவனமும் நாட்டமும் கொள்ளவேண்டும் என்றும் கலந்துகொண்ட இளையர்கள் கருத்துரைத்தனர்.

ஒவ்வோர் ஆண்டும் சிண்டா இளையர் மன்றத்தால் நடத்தப்படும் இக்கருத்தரங்கு, பல்வேறு மேல் நிலைக் கல்விநிலையங்களில் பயிலும் இந்திய இளையர்களை ஒன்றிணைக்கிறது.

சிங்கப்பூர் சமுதாயத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது சிண்டாவின் இளையர் தலைவர்களுக்கான கருத்தரங்கு.

"நம்மிடையே தலைமைத்துவத்தைக் கண்டறிதல்," என்ற கருப்பொருளுடன் மூன்று நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கு தேசிய பல்கலைக்கழகத்தின் ரிட்ஜ் வியூ ரெசிடென்ஷியல் கல்லூரியில் நடைபெற்றது.

அதில் இடம்பெற்ற முக்கிய அங்கங்களில் ஒன்றாக இருந்தது மாணவர்களுடன் தலைமைத்தும் தொடர்பாக திரு குப்தா நடத்திய கலந்துரையாடல்.