வெற்றிப்பெற அத்தியாவசியமான நற்பண்புகள் பெற்றிருக்கவேண்டும்: பிரதமர் லீ

வெற்றிப்பெற அத்தியாவசியமான நற்பண்புகள் பெற்றிருக்கவேண்டும்: பிரதமர் லீ

2 mins read
5de6b1e8-5332-4ebf-93a7-58ab197bc240
கல்வி அமைச்சின் எடுசேவ் விருது பெற்ற 242 மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பிரதமர் லீ உரையாற்றினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிப் பாதையில் செல்ல குடிமக்கள் அத்தியாவசியமான நற்பண்புகளைப் பெற்றிருப்பது அவசியம் என்று கூறினார் பிரதமர் லீ சியன் லூங்.

அவர்கள் நன்றாகக் கற்றுத் தேர்ந்தவர்களாகவும் சிறப்பாக பயிற்சிபெற்ற ஊழியர்களாகவும் இருப்பதும் அவசியம் என்று கூறிய அவர், நற்பண்புகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.

சிங்கப்பூர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாழ்வதற்குத் தேவையான திறன்கள் மட்டுமின்றி அவர்களின் குணநலன்களையும் நற்பண்புகளையும் வளர்ப்பதற்குத் தேவையான திறன்களும் கற்றுக்கொடுக்கப்படுவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.

டவுன்ஸ்வில் தொடக்கப் பள்ளியில் உரை நிகழ்த்திய பிரதமர், கல்வி முறையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை ஆதரிக்குமாறு பெற்றோர்களைக் கேட்டுக் கொண்டார்.

கல்வி அமைச்சின் எடுசேவ் விருது பெற்ற 242 மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பிரதமர் லீ உரையாற்றினார்.

"நமது மாணவர்கள் உலகத்தைப் புரிந்துகொள்வதோடு தேசிய உணர்வையும் சமூகத்தைப் பற்றிய தெளிவையும் பெறுவது அவசியம்.

"உலகின் இன்னல்களை வெற்றிகொள்ளுதல், நம்மை நாமே சார்ந்திருத்தல், வளப்பத்தையும் செழிப்பையும் அடைதல் ஆகியவற்றுக்கான மீள்திறனையும் தீர்மானத்தையும் மாணவர்கள் கொண்டிருக்க வேண்டும்.

"இவற்றைப் பெற பள்ளியில் கற்றுக்கொண்ட மொழி, அறிவியல், கணிதம், பொருளியல், வரலாறு போன்றவை தொடர்பான அறிவாற்றலை மட்டும் சார்ந்திருப்பது போதாது.

"சக வகுப்பு மாணவர்கள், சக குடிமகன்கள் ஆகியோர் நலனில் அக்கறை காட்டக்கூடிய பொது நலனுக்குப் பங்களிக்கத் தயாராக இருக்கக்கூடிய அத்தியாவசிய நற்பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் வேண்டும். அதுவே நமது நாட்டுக்குப் பெருமை," என்றார் பிரதமர்.

இந்த வார இறுதியில் டெக் கீ வட்டாரத்தில் வசிக்கும் 1,100க்கு மேற்பட்ட மாணவர்கள் டெக் கீ குடிமக்கள் ஆலோசனைக் குழு கல்வி உதவிநிதி விருதுகளையும் கல்வி அமைச்சின் எடுசேவ் விருதுகளையும் பெறுகின்றனர்.

கல்வி முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மாணவர்களுக்கான கற்றலை அதிக அர்த்தமுள்ளதாக்கும் என்று தெரிவித்தார் அங் மோ கியோ குழுத் தொகு நாடாளுமன்ற உறுப்பினருமான திரு லீ.