மாணவர்களை ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கைக்குத் தயார்செய்யும் வகையில் திறன்களைப் பெறச் செய்வதும் ஓர் ஆசிரியரின் பணி என்று தேசிய கல்விக் கழகத்தில் ஆசிரியர்களுக்காக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கல்வி, நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா கூறியிருந்தார்.
அதன் பிரதிபலிப்பாக விளங்குகிறார் கல்வித் துறைக்கான தலைசிறந்த இளையர் விருதைப் பெற்றவர்தான் 31 வயது குமாரி அர்ஜுனன் அபிராமி.
மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கற்றுக்கொடுப்பதுடன் ஆசிரியர் பணியில் பெரும் அர்ப்பணிப்பை வெளிக்காட்டிய தலைசிறந்த இளம் ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மொத்தம் 298 பள்ளிகளைச் சேர்ந்த 1,380 ஆசிரியர்கள் இவ்விருதுக்காக முன்மொழியப்பட்டனர். இவர்களில் ஆறு ஆசிரியர்கள் இவ்விருதினைப் பெற்றனர். சிஹெச்ஐஜே (கெல்லொக்) தொடக்கப் பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் கணிதமும் ஆங்கிலமும் கற்றுக்கொடுத்து வருகிறார்.
முதலாமாண்டு கற்பித்தபோது மாணவர்களிடையே சிறுசிறு சச்சரவுகள் நிகழ்வதைக் கவனித்த அபிராமி, பிரச்சினைகளைத் தீர்த்தவாறே மாணவர்களின் பண்பு நலன்களையும் வளர்க்கவேண்டும் என்ற வேட்கையில் ஒரு நூதன முயற்சியில் இறங்கினார்.
தோழமை, மரியாதை, பரிவு போன்ற நற்பண்புகளை விளக்கும் கையேடுகளை இவர் தயாரித்தார். கையேடுகளில் இடம்பெறும் சிறு கதைகள், சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவு எடுப்பது பற்றி விளக்கும்.
பாட நடவடிக்கைகளில் ஈடுபடும் போது வெவ்வேறு பண்புநலன்களின் முக்கியத்துவத் தைப் பற்றி மாணவர்கள் ஆழமாகத் தெரிந்துகொண்டனர்.
ஓர் ஆசிரியர் கற்பித்தலோடு நின்றுவிடாமல் மாணவர்களின் முழுமையான மேம்பாட்டில், குறிப்பாக பண்புநலன்களை வளர்ப்பதில் கடப்பாடு கொண்டிருக்க வேண்டும்.
மாணவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் உத்திகளை மாணவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்,'' எனத் தெரிவித்தார் இந்த இளையர்.
"கற்றல் என்று வரும்போது மாணவர்கள் தாங்கள் இதுவரை சாதித்து வந்ததை எண்ணிப் பெருமிதம் கொள்ளவேண்டும். பாடத்தில் ஏதேனும் சிரமம் ஏற்படும்போது, 'உனக்குத் தெரியாது என்றில்லை. நீ இன்னும் அதைப் பற்றி தெரிந்துகொள்ளவில்லை' என்பேன்," என்றார் குமாரி அபிராமி.
இவரைப் போலவே மாணவர் நலனின் அக்கறை கொண்டு ஈடுபட்டு வருபவர் ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் திரு கெவின் ஜோசஃப் ஃபிரான்சிஸ். விருதுக்கு நியமனம் செய்யப்பட்ட பத்து பேரில் இவரும் ஒருவர்.
மாணவர்களுடன் நெருங்கிய பந்தத்தை வளர்த்து அவர்களை ஊக்குவிப்பதில் இவர் பெரும் ஈடுபாடு கொண்டவர்.
''பள்ளிக்குத் தினமும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எல்லா பிள்ளைகளிடமும் இருக்கும் என நம்புகிறேன். ஆனால் சில வேளைகளில் தங்களின் தனிப்பட்ட கஷ்டங்களாலோ ஊக்குவிப்பு பெறாததாலோ இவர்கள் பள்ளிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மாணவருடனும் பெற்றோ ருடனும் இணைந்து இத்தகைய பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன் மாணவருக்கு ஊக்கம் அளிப்பதை நான் என் முக்கிய கடமையாகக் கருதுகிறேன்,'' என்றார் திரு கெவின், 34.
மாணவர் விருப்பத்தை அறிந்து அவர்கள் வழியிலேயே சென்று அவர்களின் போக்கிலும் நடத்தையிலும் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவதில் இளையர் கெவின் அதிக நாட்டம் கொண்டுள்ளார். இவரின் புதுமையான முயற்சிகளில் அடுத்ததாக இந்த வாரம் முழுவதும் வகுப்புகளுக்கு ஒரு மாணவராகச் சென்று அமரப் போவதாக கெவின் பகிர்ந்துகொண்டார்.
இவ்வாறு மாணவர் நிலையில் பள்ளிப் பருவத்தை அனுபவிக்கும்போது, கற்றல் அனுபவத்தை மேம்படுத்த என்னென்ன உத்திமுறைகளைக் கையாளலாம் என்பதை அனுபவபூர்வமாக அறியலாம் என்பது கெவினின் நம்பிக்கை.
''அனைத்து மாணவர்களின் குடும்பப் பொருளாதாரச் சூழலும் சிறப்பாக அமைந்துவிடுவதில்லை. அப்போது அவர்களுக்குக் கிடைக்கும் ஊக்கமே கல்விப் பயணத்தில் நடைபோட உதவும். கல்வியறிவு பெற்று அவர்கள் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீண்டு வரமுடியும்," என்று தெரிவித்தார் ஆசிரியர் கெவின்.

