மக்களின் குணநலன்களும் நடத்தையும் அறிய இலக்கிய வாசிப்பு உதவும்

மக்களின் குணநலன்களும் நடத்தையும் அறிய இலக்கிய வாசிப்பு உதவும்

2 mins read
a41fc739-b846-4bb3-9f91-03df8416b005
உன்னதமான ஆசிரியர் பணியில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் கிஷன் கண்ணன். -

இலக்கியம் மனிதரைச் செம்மைப்படுத்தி, மேன்மைப்படுத்தி, வாழ்க்கையின் பல பரிமாணங்களைக் காட்டுகிறது என்று கூறுகிறார் பல விருதுகளுடன் தேசிய கல்விக் கழகத்தில் மிகச்சிறந்த தேர்ச்சி பெற்று, உன்னதமான ஆசிரியர் பணியில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் கிஷன் கண்ணன்.

இலக்கிய மாணவர் ஒரே நேரத்தில் தர்க்கவாதி, விமர்சகர், மனோதத்துவ மேதை, ஓவியர், வழக்கறிஞர் என பலவாக மாறுகிறார் என்ற கிஷன் இலக்கிய வாசிப்பு ஒவ்வொருவருக்கும் மிக முக்கியம் என்றார்.

லீ குவான் இயூ தங்க விருது, ரோட்டரி இன்டர்நேஷனல் தங்க விருது, பிரிட்டிஷ் மன்ற பரிசு என பல விருதுகளை அவர் குவித்துள்ளார்.

"இலக்கியம் என்பது ஒரு பாடம் மட்டுமல்ல, அது ஓர் உணர்வு. இலக்கியக் கதைகளையும் கதை மாந்தர்களையும் ஆராயும்போது மக்களின் குணநலன்கள், நடத்தை, சமூகம் ஏன் குறிப்பிட்ட விதங்களில் இயங்குகிறது, நமது நம்பிக்கைகளுக்காக நாம் ஏன் போராடவேண்டும் போன்றவற்றை மாணவர்களால் புரிந்துகொள்ள முடியும்," என்று விவரித்தார் திரு கிஷன்.

இந்த ஆண்டில் பல்வேறு விருதுகளைப் பெற்று உயர்ந்த தேர்ச்சி பெற்ற பத்து பேரில் ஒருவரான கிஷன் கண்ணன், தேசிய கல்விக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

ஆசிரியராக வேண்டும் என்ற இலக்கு சிறு வயது முதல் இருந்தபோதும் ஆங்கிலோ சீனப் பள்ளியில் அனைத்துலக பக்கலோரே(ஐபி) படிப்பைத் தொடர்ந்த காலத்தில்தான் ஆங்கில இலக்கியத்தை தனது துறையாக இவர் தேர்ந்துஎடுத்தார்.

தற்போது கிளமெண்டி உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கியம் கற்பிக்கும் திரு கிஷனுக்கு மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்துவது முதன்மையான இலக்கு. தேர்வு மதிப்பெண் துணை இலக்கு. இந்த மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்க விரும்புகிறார் இந்த இளம் ஆசிரியர்.

தொடக்கநிலைப் பள்ளிக் காலம் முதல், பேச்சுப் போட்டி, நாடக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்ததன் வழியாக மொழி ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட திரு கிஷனுக்கு, அகராதிகளில் தேடி வார்த்தைகளின் உட்பொருளைப் புரிந்துகொள்வது பிடிக்கும்.

"படிப்பதன் மூலம் மட்டுமே சொல்வளத்தைப் பெருக்கலாம் என்பதல்ல. சொற்செரிவுள்ள காணொளிகளைப் பார்ப்பதன் மூலமாகவும் மொழித்திறனை வளர்க்கலாம்," என்கிறார் கிஷன்.

ஷேக்ஸ்பியரின் பிரபலமான படைப்புகள் உள்ளிட்ட பல படைப்புகளை ஆங்கில இலக்கியத்தைப் பயிலத் தொடங்கும்போது படித்ததை நினைவுகூர்ந்த கிஷன், மொழித்திறனை வளர்ப்பது பல ஆண்டு முயற்சி என்றார்.

மாணவர்கள் சுயமாகவே ஆராயும் சூழலை ஆசிரியர்கள் உருவாக்கினால் அதன் மூலம் கற்கும் விவரங்கள் அவர்களது ஆழ்மனதில் பதியும் எனக் கருதும் திரு கிஷனுக்கு மாணவர்களையும் அவர்களது கருத்துகளையும் மையப்படுத்தி வகுப்புகளை நடத்துவது பிடிக்கும்.