இதயம் தொடர்பான நோய்கள் உலகமெங்கும் 17 மில்லியன் மரணங்களுக்குக் காரணமாக அமைகின்றன. அதில் பாதி அளவு மரணங்கள் ஆசியாவில் நிகழ்கின்றன.
சிங்கப்பூரில், மூன்றில் ஒரு மரணம் இதய நோய்களாலும் பக்கவாதத்தாலும் நிகழ்கின்றது. சிங்கப்பூரின் மக்கள் தொகை மூப்படையும்போது, மேலும் அதிகமான மக்கள் இத்தகைய நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.
முதிய வயதில் நாம் நோய்களுக்கு எளிதில் ஆட்படுவோம். அதோடு ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அபாயக்கூறுகளாக உள்ளன.
'தி ஹெல்தி ஹார்ட்ஸ்' என்னும் 'ஹெல்த ஆசிய பசிபிக்' அறிக்கையில் தீராத நோய்கள் வந்தவுடன் அவற்றைக் குணமாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதைக் காட்டிலும் அவை வருவதற்குமுன் நோய்த் தவிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதே அதிகப் பலன்களை அளிக்கும் என்பதை வலியுறுத்தியது.
நோய்கள் வராமல் தவிர்க்க ஆரோக்கியமான வாழ்க்கைமுறை அவசியம் என்பதைப் பலர் அறிந்திருந்தாலும் அவ்வாறு செய்வதால் மாரடைப்பு முதலிய கடுமையான நோய்களைத் தடுக்க முடியும் என்பதை அறிந்திருக்கவில்லை.
"நோய்த் தவிர்ப்பு நடவடிக்கை என்பது புதிதன்று. இருந்தாலும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுத்துச் செயற்படுவதற்குப் பலர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை," என்றார் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் இதயப் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் டான் ஹுவே சீம்.
"சிங்கப்பூரில் மூன்றில் ஒருவருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
"உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களில் பாதி பேர் தங்கள் ரத்த அழுத்தத்தைப் பாதுகாப்பான அளவுக்குக் கொண்டு வருவதில் அக்கறை காட்டுவதில்லை," என்றார் பேராசிரியர் டான்.
'தில் ஹெல்தி ஹார்ட்ஸ்' அறிக்கையில் சுகாதாரம் தொடர்பான கல்வியை, பொதுமக்கள் மட்டுமல்லாமல், மருத்துவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பேராசிரியர் டான் கூறினார்.

