உடற்பயிற்சி மேற்கொள்வது உடலுக்குப் பொதுவாக நல்ல விளைவுகளையே தருகிறது. இதய நோய்கள், உடற்பருமன், பக்கவாதம், நீரிழிவு நோய் முதலானவற்றிலிருந்து விடுபடவோ அவற்றின் தாக்கத்தைக் குறைக்கவோ உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது. மிதமான உடற்பயிற்சிகளும், நடைப்பயிற்சிகளும் மனத்திற்கு இதமளிப்பதாகவே கூறப்படுகிறது.
ஆனால் 'தி லான்செட் சைக் கியாட்ரி' எனப்படும் சஞ்சிகையில் அண்மையில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று உடற்பயிற்சிக்கும், மனநலத்துக்கும் இடையேயான தொடர்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. அதில், ஒரு நாளைக்கு 90 நிமிடங்களுக்கு மேல் சைக்கிளோட்டுதல், சீருடல் பயிற்சி முதலானவற்றை மேற்கொள்பவர்களின் மனநலனில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
மனநலத்தின் மீதான உடற்பயிற்சியின் தாக்கத்தை ஆய்வு செய்யும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உடற்பயிற்சியின் வகைகள், உடற்பயிற்சி செய்யும் நேர அளவு, எவ்வளவு நேர இடைவெளியில் உடற்பயிற்சி செய்யப்படுகிறது என்ற அளவு, எவ்வளவு தீவிரமாக உடற்பயிற்சி செய்யப்படுகிறது என்பது முதலான தகவல்கள் திரட்டப்பட்டு அவை மனநலத்திற்கு ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி ஆராயப்பட்டது.
உடற்பயிற்சியில் ஈடுபடுவோர், ஈடுபடாதவர்கள் ஆகியோரிடமும் மனநிலை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
மிகத் தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவோரிடம் மன அழுத்தம் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதிலிருந்து மிக முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று கூறினார் மனநல நிபுணர் திருமதி வைஷ்ணவி வாசு. எந்த விஷயத்தையும் அளவுக்கு மீறி செய்தால் அது நன்மை பயக்காது என்பது அவரது கருத்து.
"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு'' என்று நமது முன்னோர் கூறியுள்ளனர். அதற்கேற்ப நாம் எந்த ஒரு செயலையும் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாகச் செய்தால் நன்மை என்று நினைத்துப் பாதகத்தை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது," என்றார் அவர்.
உடற்பயிற்சி ஒருவரின் உடலுக்கும், மனநிலை ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்காக அதிகப்படியாக அதில் ஈடுபட்டு உடல்நலத்தைச் சீராக்கும் முயற்சியில் மனநலத்தைப் பாதிக்கவிட்டுவிடக்கூடாது என்பது நிபுணர்களின் அறிவுறுத்தல் ஆகும்.

