தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதுமையிலும் துடிப்புடன் ஆரோக்கிய வாழ்க்கைமுறை கடைப்பிடிக்க வழிகள் உண்டு

3 mins read
d10d9740-4f7e-4498-b5d1-d0c8f21854da
'ரிச் சமூக கேஃபே' உணவு பரிமாறும் திருமதி எலிஸ் மதில்டா பீட்டர் (இடமிருந்து மூன்றாவது). படம்: திமத்தி டேவிட் -

வீட்டில் மூத்த பிள்ளை பிறந்தபோது, தமது பேரங்காடி உதவியாளர் வேலையை விட்டுவிட்டு இல்லத்தரசியாக வீட்டின் பொறுப்புகளைக் கையாண்டார் திருமதி எலிஸ் மதில்டா பீட்டர்.

இன்று அவரது நான்கு பிள்ளைகளும் பெரியவர்களாகிவிட்ட நிலையில் 55 வயது எலிஸுக்கு தாம் விரும்பிய நடவடிக்கைகளில் ஈடுபட கூடுதல் நேரம் உள்ளது.

குடும்பத்தினருக்கு விருப்பமான உணவு வகைகளைச் சமைத்துக் கொடுப்பது, வீட்டுப் பணிகளைச் செய்வதற்கு அப்பால், ஆரோக்கிய வாழ்க்கைமுறையை அவர் கடைப்பிடித்து வருகிறார்.

புக்கிட் பாத்தோக்கில் வசிக்கும் அவரது தங்கை ஒருமுறை தமது அடுக்குமாடி வீட்டின் எதிரே உள்ள 'ரிச் யூத் பவர்ஹவுஸ்' நிலையத்தில் 'சும்பா' (Zumba) எனும் விறுவிறுப்பான உடற்பயிற்சியில் முதியவர்கள் பங்கெடுப்பது குறித்து எலிசாவிடம் தகவல் தெரிவித்தார்.

உடல் உறுதியை வலுப்படுத்தும் நோக்கில் தாமும் அந்த திட்டத்தில் சேர்ந்தார் எலிஸ். அப்படி சேரும்போதுதான் முதியவர்களுக்காக அங்கு நடத்தப்படும் 'ரிச் சமூக கேஃபே'யை'ப் பற்றி அவர் அறிந்தார்.

வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சுமார் 50 முதியவர்களுக்கு காலை உணவு சமைக்க சக முதியவர்கள் முன்வந்து தொண்டூழியம் புரிகின்றனர்.

அந்நிலையத்தில் சமைப்பது, உணவு பரிமாறுவது என வெவ்வேறு பொறுப்புகளை முதியவர்களே கையாள்கின்றனர்.

தனிமையில் வாழ்பவர்கள் அல்லது தனிமையாக்கப்படும் அபாயம் உள்ள முதியவர்கள் புதிய நண்பர்களைச் சந்தித்து, ஒன்றுசேர்ந்து உணவு உண்டு, ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளும் தளமாக இந்த 'ரிச் சமூக கேஃபே' விளங்குகிறது.

இதில் தொண்டூழியராக கிட்டத்தட்ட 1.5 ஆண்டுகளாக திருமதி எலிஸ் சேவை ஆற்றி வருகிறார்.

காலை உணவுக்காக வரும் சில முதியவர்கள் நடப்பதற்கு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதை எலிஸ் உணர்கிறார்.

உணவு தயாரானதும் அவர்களுக்கு உணவு பரிமாறி, உரையாடல்களில் ஈடுபடுவதில் எலிசுக்கு ஒருவித திருப்தி கிடைக்கிறது.

சில வேளைகளில் தாம் வீட்டில் சமைத்த உணவு வகைகளை மற்ற முதியவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் அவர் முயல்கிறார்.

ஒவ்வொரு வாரமும் விதவிதமான, ஆரோக்கியமாக தயாரிக்கப்படும் காலை உணவு வகைகளை முதியவர்கள் சுவைக்கின்றனர்.

உணவு உண்டதோடு முதியவர்கள் உடனடியாக வீட்டுக்கு திரும்புவதில்லை. அவர்களுக்காக ஓவியமும் கைவினையும் அல்லது போலிஸ் எச்சரிக்கை தகவல்களை விளக்கும் அங்கங்களும் 'ரிச் சமூக கேஃபே'யில் இடம்பெறும்.

"ஒரு நாள் எங்களுக்கும் வயதாகிவிடும். அந்த நிலையை எட்டும்போது பிறருடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அந்த ஆசையைப் பூர்த்திசெய்யும் வகையில் முதியவர்களுடன் இயல்பாக பழகி மகிழ்ச்சிப்படுத்தலாமே என்று முடிவெடுத்தேன்,'' என 'ரிச் சமூக கேஃபே' திட்டத்தில் சேர்ந்த நோக்கத்தை விளக்கினார் திருமதி எலிஸ்.

ஒவ்வொரு வாரமும் தவறாமல் 'ரிச் சமூக கேஃபே'க்கு திருமதி எலிஸ் வந்துவிடுவார் ஏனெனில் காலப்போக்கில் அங்கு வரும் முதியவர்களுடன் அவர் அணுக்கமான உறவை வளர்த்துக்கொண்டார்.

அவ்வப்போது இந்த முதியவர்களையும் சக தொண்டூழியர்களையும் மதிய உணவுக்காக அக்கம்பக்கத்தில் உள்ள உணவு அங்காடி நிலையங்களிலும் தாம் சந்திப்பதாக எலிஸ் கூறினார்.

வீட்டில் இருப்பது போன்ற இதமான சூழலை தரும் 'ரிச் சமூக கேஃபே'க்கு வரும்போது, வேறு எதையும் பற்றி சிந்திக்காமல் எப்படி சக நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம் என்ற எண்ணம்தான் தோன்றும் என்றார் எலிஸ்.

வயதாகிவிட்டதே என்று சொல்லி வீட்டில் முடங்கிக்கிடக்காமல் ஒரு துடிப்பான வாழ்க்கைமுறை முதியோரிடம் நீடிக்க வேண்டும் என்பது இவரின் கருத்து.

'ரிச் யூத் பவர்ஹவுஸ்' நிலையத்தில் நடத்தப்படும் மற்ற முதியோருக்கான திட்டங்களில் தொண்டூழியம் புரிவதில் எலிஸ் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்.

ஞாபக மறதி நோயால் வாடும் முதியவர்களுக்கு நடவடிக்கைகளை வழிநடத்துவது, முதியவர்களை உள்ளூரிலுள்ள கரையோரப் பூந்தோட்டங்கள் போன்ற சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்வது போன்றவற்றில் இவரது பங்கு அடங்கியுள்ளது.

வீட்டில் தனிமையில் இருக்கும்போது எதிர்மறையான சிந்தனைகள் அலைமோதும், யாரிடமும் பேசாத பட்சத்தில் ஞாபக மறதி நோய் தாக்கும் சாத்தியம் அதிகரிக்கிறது என்று குறிப்பிட்ட எலிஸ், தனிமையைப் போக்கும் முதல் அடியை முதியவர்கள்தான் எடுத்து வைக்க வேண்டுமென்றார்.

தற்போது குறைந்த எண்ணிக்கையில் இந்திய முதியவர்கள் 'ரிச் சமூக கேஃபே'யின் சேவையை நாடுவதால் இன்னும் அதிகமானோர் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும் என்பது எலிஸின் வேண்டுகோள்.

இத்திட்டத்தில் சேர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபட கூச்சப்படும் முதியவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து திட்டத்தில் இணையலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.