புதிய இணைய ஒளிக்காட்சித் தொடர் ஒன்றைத் தமிழ் முரசு நாளிதழ் வெளியிட இருக்கிறது. இது சமூக அக்கறைகள் பற்றிய சிந்தனையைத் தூண்டும் விதமாக இருக்கும். இந்தத் தொடர் தமிழரின் பாரம்பரியக் கலைகளின் வடிவமான தெருக்கூத்து வடிவத்தில் அமைந்திருக்கும்.
அதைத்தான் "தமிழர் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான தெருக்கூத்தின் மூலம் சமூகச் செய்திகளை உள்ளூர் சூழலுக்கு ஏற்பப் படைக்கும் முயற்சிகளை இத்தொடரில் கையாண்டுள்ளோம்," என்று தயாரிப்பு நிறுவன இயக்குநரான திரு இ. சுந்தர் தெரிவித்தார்.
இந்தத் தொடரின் ஒளிக்காட்சிகளில் இடம்பெறும் வெளிப்புறக் காட்சிகள் வண்ணமயமாகவும் ஆர்வமூட்டும் வகையில் இருப்பதுடன் இளைஞர்களைச் சென்றடைவதற்காக நவீனச் சாயலில் இருக்கும். இத்தொடர் ஐந்து ஒளிக்காட்சிகளில் இடம்பெறும் என்றும் திரு சுந்தரம் விளக்கினார். தமிழ் முரசில் அச்சு வடிவில் மக்களுக்குத் தெரிவிக்கும் செய்திகளைத் தெருக்கூத்து வழியாகவும் சேர்க்க முடியும் என்பதே இத்தொடரின் நோக்கம்.
தெருக்கூத்துப் படைப்பில் இடம்பெறும் மூலக் கதாபாத்திரம், நாடக அம்சங்களில் அதிகக் கவனம் செலுத்துவார்கள். அதற்காகவே பின்னணியில் நடனமணிகள் பாடலுக்கு ஏற்றவாறு அபிநயம் பிடிப்பர் என்று குழுவில் இடம்பெற்றுள்ள துணை நடன ஒருங்கிணைப்பாளர், 35 வயது முகம்மது ஷஜீர் கான் சொன்னார். ஒயிலாட்டம், பறையாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்களும் இவர்களது படைப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
தேசிய ஒருங்கிணைப்புத் தெருக்கூத்துப் படைப்பில் மலாய், சீனப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பொருள்கள் நடனத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் குழுவின் நடன ஒருங்கிணைப்பாளர் ரா. சுரேந்திரன், 35, கூறினார். மேலும் அவர், "வழக்கமான பாரம்பரிய நடனத்துடன் ஒப்பிடுகையில் தெருக்கூத்தில் முகபாவனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து உரக்கப் பேசி நடித்து, ஆடிப்பாடும் சுதந்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது,'' என்றார்.
தமிழ் முரசின் சிறப்புத் தெருக்கூத்து ஒளிக்காட்சித் தொடரில் பிரபலத் திரைப்படக் கலை இயக்குநரான திரு த.ராமலிங்கத்தின் தனி முத்திரை பதிந்துள்ளது. இவர், 'காலா', 'கபாலி' முதலிய தமிழ்த் திரைப்படங்களின் கலை இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம், வானூர் வட்டம், பேராவூர் கிராமத்தில் பிறந்த இவர், தெருக்கூத்தில் தொடங்கித் திரைப்படங்களில் நுழைந்துள்ளார். பகலில் விவசாயமும் இரவில் தெருக்கூத்துக் கலைஞராகவும் மாறிய தமது தந்தையைப் பார்த்து வளர்ந்தவர் இவர். அது தம்மையும் ஒரு கலைஞனாகச் செதுக்கியது என்றார் அவர்.
"தமிழ் முரசு நாளிதழைத் தோற்றுவித்த அமரர் தமிழவேள் கோ. சாரங்கபாணி, மறைந்த முன்னாள் சிங்கப்பூர்ப் பிரதமர் திரு லீ குவான் இயூ ஆகியோர் சிங்கப்பூரில் தமிழ்மொழிக்காக ஆற்றிய பங்குபற்றி ஆழமாக அறிந்து கொண்டேன். சிங்கப்பூர் மக்களோடு தெருக்கூத்துக் கலையை பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று திரு த.ராமலிங்கம் கூறினார்.

