கொவிட் சூழலில் பள்ளிகளில் ஏற்படும் நட்பு

கொவிட் சூழலில் பள்ளிகளில் ஏற்படும் நட்பு

2 mins read
943e3189-53e1-4610-8204-d4912f3bc26b
-

புதிதாக உயர்நிலைப்பள்ளியில், தொடக்கக்கல்லூரியில், பலதுறை தொழில்நுட்பக் கல்லூரியில், பல்கலைக்கழகங்களில் இணைந்துள்ள மாணவர்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான பயம், புதிய சூழலில் நல்ல நண்பர்களைக் கண்டறிவதுதான்.

அத்தகைய பயத்தைப் போக்க, பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் அறிமுக நிகழ்வுகளைப் பெரிய அளவில் ஏற்பாடு செய்வதுண்டு.

இதனை முன்னிட்டு, பல பள்ளிகளில் ஒரு வாரம் முழுவதும் ஒதுக்கப்பட்டுப் பள்ளிப் பாடங்களின்றி, பிணைப்பை ஏற்படுத்தும் பலவித நடவடிக்கைகள் மட்டுமே நடக்கும்.

பெரும்பாலும், இத்தகைய நிகழ்வுகளைப் பள்ளியில் உள்ள கடைசி ஆண்டு மாணவர்கள் ஏற்று நடத்தி, புது மாணவர்களுடன் நட்புப் பாராட்டுவர்.

இந்நிகழ்வின்போது பள்ளி வளாகத்தைச் சுற்றிக் காண்பிப்பதோடு, அந்தக் குறிப்பிட்ட பள்ளிக்கே உரிய கலாசாரக் கூறுகளையும், பள்ளியின் ஊக்கக் கூவல்களையும் (Cheers) புது மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள் அறிமுகப்படுத்துவர்.

பள்ளிச்சுமை அதிகரிப்பதற்குமுன் இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்று நல்ல நண்பர்களைச் சந்திப்பதோடு இனிய நினைவுகளைச் சேகரித்துக்கொள்ளப் பல புகுமுகநிலை மாணவர்கள் விருப்பப்படுவர்.

ஆனால், கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில், புகுமுகநிலை மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கக்கூடிய அறிமுக நிகழ்வுகள் அனைத்தையும் இணையம்வழி நடத்தவேண்டிய கட்டாயம் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

"எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அறிமுக நிகழ்வு, பள்ளிப்பாடங்களைப் பற்றியே அதிகம் இருந்தது.

வகுப்புகள் தொடங்கும்போதுதான், புதிய மாணவர்களைச் சந்தித்து உரையாடுவதற்கும் அவர்களைப்பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கும் எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அதுவரை, நண்பர்கள் அமையும் வாய்ப்பு எங்களுக்கு இல்லை," என்றார் பி எஸ் பி அகாடெமியில் முதலாம் ஆண்டில் பயிலும் தசரதராமன் ஷியாம், 20.

கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய பள்ளிகளில் இணைந்த புகுமுகநிலை மாணவர்கள், அந்நியமான சூழலில் தனிமையாக உணரக்கூடும் என்பதால், அவர்களுக்கு உதவப் பள்ளி ஆலோசகர்கள் முன்வரக்கூடிய நிகழ்வுகளைப் பள்ளிகள் ஏற்பாடு செய்துவருகின்றன.

2021-ஆம் ஆண்டில், மனநலம் குறித்த முயற்சிகளைப் பள்ளிகளில் அமலாக்கம் செய்யவிருப்பதாகக் கூறிய கல்வி அமைச்சர் திரு சான் சூன் சிங், பள்ளிகளில் ஆதரவு அளிக்கக்கூடிய குழுக்களும் மனநலத் திட்டங்களும் வலுப்படுத்தப்படும் என்றும் கடந்த ஆண்டு பகிர்ந்துகொண்டுள்ளார்.

அந்நியச் சூழலில் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடிய புகுமுகநிலை மாணவர்கள், நல்ல நட்புறவுகளை அமைத்துக்கொள்ளச் சிரமப்பட்டால், கல்வி அமைச்சின் பள்ளிகள்சார்ந்த திட்டங்களையும் பள்ளி ஆலோசகர்களையும் நாடலாம்.