புதிய தோற்றமும் வசதிகளும் பெறும் சிங்கப்பூர் எக்ஸ்போ வளாகம்

புதிய தோற்றமும் வசதிகளும் பெறும் சிங்கப்பூர் எக்ஸ்போ வளாகம்

2 mins read
40da9a85-741d-475f-9cf3-41bd2ffe573f
-

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெரிய அளவில் நேரடி நிகழ்ச்சிகளும் கூட்டங்களும் நடைபெறாது அவற்றுக்கான தேவை குறைந்துள்ள நிலையில், அவை நடைபெற்று வந்த முக்கியப் பெரிய வளாகங்களில் ஒன்றான சிங்கப்பூர் எக்ஸ்போவின் சில பகுதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

பொழுதுபோக்கு, விளையாட்டு, உணவு பானத் துறைகளைச் சேர்ந்த புதிய வசதிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் எக்ஸ்போ வளாகத்தில், 'கோ கார்ட்' பொழுதுபோக்குக் காரோட்டத் தடம், உட்புற பேட்மிண்டன் அரங்கம் முதலியவை கடந்த ஆண்டு புதிதாகத் திறக்கப்பட்டன.

எக்ஸ்போ கட்டடத்தின் 4-ஆம் முதல் 6-ஆம் கூடங்களுக்கு வெளியில் உள்ள வெளிப்புறக் கார் நிறுத்தும் இடங்களுள் ஒன்றில், 'டிம்பர்+' உணவகம் இயங்கி வருகின்றது.

முந்நூறு இடங்களைக் கொண்ட மற்றுமொரு கார் நிறுத்துமிடம், 'கோ கார்ட்' கார்த்தடமாக மாற்றப்பட்டுள்ளது.

'கேஎஃப்1' கார்ட்டிங் எனும் நிறுவனம் இந்த பொழுதுபோக்குத் தடத்தை நடத்தி வருகின்றது.

இந்நிறுவனம் ஏற்கனவே கிராஞ்சியிலுள்ள சிங்கப்பூர்க் குதிரைப் பந்தய மன்றத்தில் இதே போன்ற 'கோ கார்ட்' ஓட்டத்தடத்தை நடத்திவருகின்றது.

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ள முதல் 'கோ கார்ட்' தடமாக இது உள்ளது என்றும், ஏறக்குறைய ஒரு மில்லியன் டாலர் செலவில் இத்தடம் கட்டப்பட்டுள்ளது என்றும் 'கேஎஃப்1' நிறுவனத்தை நடத்தும் அரினா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு ரிச்சர்ட் டான் தெரிவித்தார்.

மேலும், சிங்கப்பூரின் ஆகப் பெரிய வெளிப்புற கோகார்ட் கார்த்தடமாக எக்ஸ்போவில் அமைந்துள்ள தடம் தற்போது விளங்குகிறது.

புதிய எக்ஸ்போ வளாக அரங்கத்தில் விளையாடுவதற்கு 22 கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய பேட்மிண்டன் அரங்கமாக இது திகழ்கிறது.