யுகேஷ் கண்ணன்
பிள்ளைகளின் சிந்தனையாற்றலும் கற்றலும் மேம்படுவதற்குத் தாய்மொழிக் கல்வி இன்றியமையாதது. எனவேதான், சிங்கப்பூரில் பாலர் பள்ளிப் பிள்ளைகளுக்குத் தாய்மொழி ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இதன் தொடர்பில் தமிழ்மொழிக் கல்வியுடன் கூடிய ஆரம்பகாலக் கல்வி பட்டயப் படிப்பைத் தற்போது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியும் இளம்பருவ வளர்ச்சிக்கான தேசிய கல்விக் கழகமும் இணைந்து வழிநடத்தி வருகின்றன. இப்பட்டயப் படிப்பில் இணைந்தவர்கள் தங்களின் கற்றல், கற்பித்தல் அனுபவம் குறித்து இங்கு பகிர்ந்துகொள்கிறார்கள்.
தமிழ்மொழிமீது தீராப் பற்று
தற்போது பட்டயப் படிப்பில் மூன்றாம் ஆண்டு மாணவராகப் பயிலும் 20 வயது இம்மானுவேல் சுவிசீஷ், ஒரு காலத்தில் பாலர் பள்ளி ஆசிரியர் ஆவதில் அதிக ஈடுபாடு இல்லாதவராம். இருப்பினும், பட்டயப் படிப்பில் சேர்ந்து ஒரு வாரத்திலேயே தன் மனத்தை மாற்றிக்கொண்டதாகக் கூறினார்.
இளம் வயதிலிருந்தே தமிழ்மொழிப் போட்டிகளிலும் விழாக்களிலும் பங்கேற்றதால் தமிழ்மீது பற்றும் ஆர்வமும் தனக்கு இருந்து வந்ததாகக் குறிப்பிட்டார் இம்மானுவேல்.
நண்பர் ஒருவரின் மூலம் இப்பட்டயப் படிப்பைப்பற்றி தெரிந்துகொண்ட இம்மானுவேல், தமிழைப்பற்றி அதிகம் கற்கும் வாய்ப்பு இதில் கிடைக்கும் என்பதால் உடனே இத்துறையைத் தேர்ந்தெடுத்தார். பட்டயப் படிப்பில் கற்பிக்கப்பட்ட பாடங்கள் தன்னைக் கவர்ந்ததாகவும் பாலர் பள்ளி ஆசிரியர் ஆவதற்குத் தன்னாலும் முடியும் என்ற நம்பிக்கையைத் தன்னுள் ஏற்படுத்தியதாகவும் கூறினார் இம்மானுவேல்.
சிங்கப்பூரில் தமிழாசிரியர்களுக்கான தேவை அதிகரித்து வருவதையும் உணர்ந்த இவர், அத்துறையில் பணியாற்றுவது தனக்குச் சாதகமாக அமையும் எனக் கருதி, இம்முடிவை எடுத்தார்.
ஆனால், இவர் நினைத்தது போல் இபபட்டயப் படிப்பு அவ்வளவு எளிதாக அமையவில்லை. சில நேரங்களில் இத்துறை ஆண்களைவிட பெண்களுக்கு ஏற்ற துறையோ என்ற கேள்வி தனக்குள் எழுந்ததாகக் கூறினார் இம்மானுவேல். இருப்பினும், தன்னாலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இவர் செயல்பட்டு வருகிறார்.
வரவுள்ள தன் வேலை அனுபவப் பயிற்சி சற்று சவால்மிக்கதாக இருக்கலாம் என்றாலும் அந்த அனுபவத்தையும் ஆவலுடன் சந்திக்கத் தான் தயார் என்கிறார் இவர். ஊடகத் துறையிலும் ஆர்வமுள்ள இம்மானுவேல், பொழுதுபோக்காகக் குறும்படங்களைத் தயாரிக்கிறார். தனது தேசிய சேவைக்குப் பின்பு, பாலர் பள்ளி ஆசிரியராகத் தனது பயணத்தை இம்மானுவேல் தொடங்கவுள்ளார்.
அடையாளத்தை உணர்த்தி வரும் ஒரு பயணம்
தமிழ்மொழி மீதுள்ள ஆர்வத்துடன் கல்வியியல் தொடர்பான ஈடுபாடும் தனக்கு உள்ளதாகக் கூறுகிறார் சிவருத்திரா ராமசாமி, 19. இரண்டாம் ஆண்டு மாணவியான இவர், உயர்நிலை மூன்றில் தொண்டூழியம் செய்வதற்காக வியட்னாம் சென்றபோது தனது இலக்கு என்ன என்பதை உணர்ந்ததாகச் சொன்னார்.
அங்குள்ள சிறுவர்களுக்குப் பாடம் கற்பித்தது தனக்கு மறக்க முடியாத ஓர் அனுபவமாக அமைந்ததெனக் கூறினார். சிறுவர்கள் ஆவலுடன் பாடத்தைக் கவனித்தது, பாடங்கள் முடிந்தபின் அவர்களுடன் செலவிட்ட நேரம் போன்ற தருணங்கள் ஒரு பாலர் பள்ளி ஆசிரியர் ஆக வேண்டும் எனத் தன்னை ஊக்குவித்ததாக இவர் கூறுகிறார். தனது பாலர் பள்ளியில் தமிழ்ப் பாடம் இல்லாததால், தொடக்கப்பள்ளியில் தமிழ் கற்க இவர் சற்று சிரமப்பட்டார்.
மற்ற மாணவர்களும் தன்போல் அவதிப்படக்கூடாது என எண்ணிய சிவருத்திரா, இந்தப் பட்டயப் படிப்பில் இணைந்தார்.
ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் பட்டயப் படிப்பு கவனம் செலுத்துவதால் பிற்காலத்தில் வேலைவாய்ப்புகள் சிறப்பாக இருக்கும் எனத் தன் பெற்றோரும் நம்பியதாகக் கூறுகிறார் சிவருத்திரா.
தொடக்கப்பள்ளி முதல் பெண்கள் பள்ளியில் படித்து வந்த இவர், பலதுறைத்தொழிற்கல்லூரியில் ஆண் மாணவர்கள் அதிகம் இருப்பர் என எண்ணினார்.
ஆனால், இக்குறிப்பிட்ட பட்டயப் படிப்பில் ஆண் மாணவர்களின் எண்னிக்கை குறைவாகவே உள்ளது என இவர் கூறுகிறார். இத்துறையில் அதிக ஆண்கள் சேர்வதன் மூலம், பாலர் பள்ளி முதல் பிள்ளைகள் ஆண் ஆசிரியர்களுக்குப் பழகிக்கொள்வர் என்றார் இவர்.
தன் அடையாளத்தை உணர்த்தும் வகையிலும் இந்தப் பட்டயப் படிப்பு தனக்கு உதவி வருவதாகக் கூறுகிறார் சிவருத்திரா.
ஆண் ஆசிரியர்களுக்கு வரவேற்பு உண்டு
தமிழ்ப் பிள்ளைகள் தங்கள் இல்லங்களில் தமிழ் பேசுவது குறைந்துள்ளதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பாலர் பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் கற்பிக்கப்படாத காரணத்தாலும் இந்தப் பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதாகப் பட்டயப் படிப்பின் தலைவர் திருவாட்டி தர்ஷினி, 48, தெரிவித்தார்.
பாலர் பள்ளியில் தமிழ் கற்காத மாணவர்கள் தொடக்கப்பள்ளியில் சிரமப்படுதவதால் பாலர் பள்ளி முதல் தமிழ்மொழி கற்பிக்கப்பட வேண்டும் எனக் கல்வி அமைச்சு முடிவெடுத்ததாக இவர் கூறுகிறார்.
இதற்குத் தகுந்தாற்போல் ஆசிரியர்களைத் திறன்மிக்கவர்களாகத் தயார்படுத்துவதே இப்பட்டயப் படிப்பின் இலக்கு என்றார் இவர்.
இதுவரை இப்பட்டயப் படிப்பை மேற்கொண்டு 84 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குறைவான எண்ணிக்கையில் ஆண் மாணவர்கள் இருந்தாலும் அந்த எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருவதாக இவர் கூறுகிறார்.
ஆண்களிடையே தற்போது இப்பட்டயப்படிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதாகவும் அவர்களில் பலர் முன்னனுமதித் திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருவதாகவும் இவர் தெரிவித்தார்.
ஆரம்பகாலக் கல்வித் துறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் போட்டி என்று எதுவும் இல்லை என்கிறார் திருவாட்டி தர்ஷினி.
பெண் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய கற்பித்தல் அனுபவத்திலிருந்து ஆண் ஆசிரியர்கள் வழங்கும் அனுபவம் சற்று மாறுபட்டது என்றும் அவர் கூறினார்.
பெற்றோர் பலர் தற்போது தங்கள் பாலர் பருவப் பிள்ளைகளுக்கு ஆண்கள் ஆசிரியர்களாக இருப்பதையும் வரவேற்பதாக இவர் குறிப்பிட்டார். ஆகையால், ஆண் பெண் இருபாலரும் இந்தத் துறையில் நல்ல ஆசிரியர்களாகத் திகழ முடியும் என்பது இவரது கருத்து.
தமிழ்மொழியை மதிக்காத நிலை ஏற்படக்கூடாது
தமிழ்க் கல்வியுடன் கூடிய ஆரம்பகாலக் கல்வி பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாறன் அன்பழகன், 20, அடுத்த தலைமுறையினருக்குத் தமிழின் அழகைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்.
இக்காலப் பிள்ளைகளுக்குத் தமிழ்மீது ஆர்வமில்லாததையும் தன் நண்பர்களில் சிலருக்குத் தமிழ் விரும்பத்தகாத ஒரு மொழியாக உள்ளதையும் கண்ட மாறன், தமிழ்மொழியை அனைவரும் மதிக்க வேண்டும் என்ற லட்சிய உணர்வுடன் இப்பட்டயப் படிப்பைத் தான் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பட்டயப் படிப்பை முடித்த மாறன், இதில் சேர்வதற்கு முன்பு வழங்கப்பட்ட பாடங்கள் குறித்து ஆராய்ந்ததில் அவை சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பட்டயப் படிப்பைத் தொடங்கினார்.
தமிழ் கற்பதால் வேலைவாய்ப்புகள் குறைவாக இருக்குமோ எனத் தன் பெற்றோர் அஞ்சியபோதும் தமிழ் கற்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பல உண்டு என அவர் புரிய வைத்தார்.
உறவினர்கள் சிலர் இம்முடிவைப் பற்றி கேள்விகள் எழுப்பினாலும் பெற்றோரின் ஆதரவுடன் தன் முடிவிலிருந்து மாறன் பின்வாங்கவில்லை.
ஆனால், கொவிட்-19 கிருமித்தொற்று காரணத்தால் எவ்வித முன்னனுபவமும் இல்லாமல் வேலைப் பயிற்சிக்குத் தான் முதன்முதலில் சென்றபோது, அது சற்று சவால்மிக்கதாக இருந்ததாக இவர் குறிப்பிடுகிறார்.
இருப்பினும் பிறருடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்ததால் எதிர்காலத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள முடிந்ததாக இவர் தெரிவித்தார்.
தேசிய சேவைக்குச் செல்ல இருக்கும் மாறன், அதை முடித்தபின் கல்வியியல் துறையில் பட்டம் பெற திட்டமிட்டுள்ளார்.
சவால்களுக்கு இடையே நேர நிர்வாகத்தைக் கற்றுத்தந்த துறை
சிறு வயதிலிருந்தே தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வத்தால் அருண் ஜூட் லோபெஸ், 18, உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். தமிழைப் பற்றி ஆழமாகக் கற்றுக்கொள்ள எண்ணிய இவர், இந்தப் பட்டயப் படிப்பைப் பற்றி இணையத்தில் ஆராய்ந்து, இதுவே தனக்கான பாதை என முடிவெடுத்தார்.
தற்போது இரண்டாம் ஆண்டு மாணவராகப் பயின்று வரும் இவர், சவால்கள் அவ்வப்பொழுது தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் பாடங்கள் அமைந்திருப்பதால் ஒவ்வொரு பாடத்திற்கும் நேரம் ஒதுக்குவது கடினமாக இருக்கிறது என்று இவர் தெரிவித்தார். ஆனால், இருக்கும் நேரத்தை சரியாக ஒதுக்கீடு செய்ய இது தனக்கு கற்றுத்தந்ததாக இவர் கூறுகிறார்.
முன்பைவிட தற்போது இந்தப் பட்டயத்தை மேற்கொள்ளும் ஆண் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் இன்னும் அதிகமான ஆண்கள் இத்துறையில் சேர்ந்தால் சிறப்பாக இருக்குமென இவர் கருதுகிறார்.
"ஆண்களுக்குப் பொதுவாக பெண்களைவிட பொறுமை குறைவு என்று சிலர் எண்ணலாம். இதனால், சிறு பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள முடியாதெனக் கருதப்படுகிறது," என்று அருண் கூறினார். பராமரிப்புச் சேவைகள் சிலவற்றை ஆண் ஆசிரியர்களால் செய்ய முடியாத சில கட்டுப்பாடுகளும் உண்டு என்று இவர் தெரிவித்தார்.
ஆனால், இவற்றைக் கடந்து ஆண்களால் நல்ல பாலர் பள்ளி ஆசிரியர்களாகத் திகழ முடியுமென அருண் கூறுகிறார். இன்றைய பாலர்களை நாளைய தலைவர்களாகச் செதுக்குவது தன் போன்ற வருங்கால பாலர் பள்ளி ஆசிரியர்களின் தலையாய கடமை எனக் கூறும் இவர், பட்டயம் பெற்ற பிறகு கல்வியியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெறத் திட்டமிட்டுள்ளார்.
பாலர் பள்ளி ஆசிரியர் என்பது ஒரு வித்தியாசமான அனுபவம்
முதன்முதலில் இந்தப் பட்டயப் படிப்பு 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டபோது அதில் சேர்ந்த மாணவர்களுள் 24 வயது புவித்ரா சிங்காரம் ஒருவர். சிறுவர்களுக்குக் கற்பிப்பதில் அவ்வளவாகத் தனக்கு ஆர்வம் இல்லாதபோதும் தமிழின்மீது இருந்த மிகுந்த ஈடுபாட்டால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பட்டயப் படிப்பில் துணிச்சலுடன் சேர முன்வந்தார் இவர்.
தன் அக்கா தொடக்கப்பள்ளித் தமிழாசிரியராக இருப்பதாலும் குடும்பத்தில் அனைவரும் தமிழின்மீது பற்றுடையவர்கள் என்பதாலும் அவர்கள் தனக்கு ஆதரவு அளித்ததாக புவித்ரா தெரிவித்தார்.
புதிதாகத் தொடங்கப்பட்ட பட்டயப் படிப்பில் சேர்ந்தது தனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்ததாகக் கூறினார்.
இந்தியாவில் உள்ள அரசாங்கப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் கற்பிக்கும் வாய்ப்பு இந்தப் பட்டயப் படிப்பின் வழியாகத் தனக்குக் கிடைத்ததாக இவர் தெரிவிக்கிறார்.
சில பாலர் பள்ளிகளுக்குக் கற்றல் பயணத்துக்காகத் தான் சென்றபோது, தன்னால் நல்ல ஆசிரியராக இருக்க முடியுமா என்ற கேள்வி தன்னுள் எழுந்ததாக புவித்ரா குறிப்பிட்டார்.
ஆனால், வேலை அனுபவப் பயிற்சிக்குப் பிறகு அந்தச் சந்தேகம் விலகியதாக இவர் கூறுகிறார். பிள்ளைகள் தன்னை அரவணைத்த விதம், தன்னால் மாணவர்களுக்கு தமிழார்வத்தைக் கொண்டு சேர்க்க முடிகிறது என்ற எண்ணம் போன்றவை இவருக்கு நம்பிக்கை ஊட்டின. மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறைகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் தனக்கு உள்ளதால், தன் பணி ஒரு சுமையாகவே தெரியவில்லை என்று இவர் கூறினார்.
எதிர்காலத்தில் தமிழ் சார்ந்த மற்றத் துறைகளில் பணியாற்றவும் தனக்கு விருப்பமுள்ளதாக புவித்ரா தெரிவித்தார்.
தமிழ்க் கல்வியுடன் கூடிய ஆரம்பகாலக் கல்விப் பட்டயப் படிப்பின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா
தமிழ்க் கல்வியுடன் கூடிய ஆரம்பகாலக் கல்விப் பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. இதை முன்னிட்டு அப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கக் கட்டடத்தில் கடந்த வாரம் கொண்டாட்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னாள் மாணவர்களுக்கும் தற்போது பட்டயப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், கலைநிகழ்ச்சியுடன் கல்விசார்ந்த கலந்துரையாடல் அங்கமும் இடம்பெற்றது.
கலந்துரையாடலின்போது தங்களது அனுபவங்கள், தாங்கள் சந்தித்த சவால்கள், அவற்றைக் கையாளும் உத்திகள் ஆகியவற்றைப் பற்றி முன்னாள் மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
மாணவர்களால் இயற்றப்பட்ட பாடல், பரதநாட்டிய நடனம், நாட்டுப்புற நடனம், தவில் இசையுடன் இணைந்த பாடல் தொகுப்பு என பல்சுவை அங்கங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
தமக்குப் பெருமிதம் அளிக்கும்படியாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளதாக இளம்பருவ வளர்ச்சிக்கான தேசிய கல்விக் கழகத்தின் இயக்குநர், திருமதி லோக் யோ டெக் யோங், 55, தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்த அருண் ஜூட் லோபெஸ், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு ஒரு மாத காலம் ஆனதாகக் குறிப்பிட்டார்.
இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒப்படைப்புகளும் பாடங்களும் இருந்த நிலையில் அனைவரும் ஒரே சமயத்தில் கூடி ஒத்திகை பார்ப்பது கடினமாக இருந்தது. இருப்பினும், நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற வேண்டும் என்று அனைவரும் விரும்பி உழைத்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியைத் தங்களால் படைக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

