சுற்றுக்காவலில் ஈடுபடும் இயந்திர மனிதர்கள்

சுற்றுக்காவலில் ஈடுபடும் இயந்திர மனிதர்கள்

2 mins read
abf599d6-9fc5-4301-a91f-798959136fbb
-

மே, 2020

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் இயந்திர மனிதக் கருவிகள் சுற்றுக்காவலில் ஈடுபட்டு வருகின்றன. தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க இந்த இயந்திர மனிதக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இம்மாதம் தொடக்கம் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடமாக அறிவிக்கப்பட்ட அந்தத் தங்கும் விடுதியில் இரண்டு இயந்திர மனிதக் கருவிகள் சுற்றுக்காவலில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த மாதம்முதல் அரசாங்கத்துக்குச் சொந்தமான தனிமைப்படுத்தும் இடத்தில் இவ்விரு இயந்திர மனிதக் கருவிகள் சுற்றுக்காவலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த இயந்திர மனிதர்களைப் பயன்படுத்துவதால் கூடுதல் இடங்களில் சுற்றுக்காவல் பணியை மேற்கொள்ளலாம் என்று தங்கும் விடுதியில் சுற்றுக்காவலில் ஈடுபடும் பதினைந்துக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகளின் தலைமைக் காவல் ஆய்வாளர் டியோ வான் லிங் தெரிவித்தார். தங்கும் விடுதியில் உள்ள மற்ற இடங்களில் காவல் துறை அதிகாரிகள் சுற்றுக்காவலில் ஈடுபடும் அதே சமயத்தில் இந்த இரண்டு இயந்திர மனிதர்களும் தங்கும் விடுதியின் வேறு பகுதிகளில் சுற்றுக்காவலில் ஈடுபடலாம் என அவர் தெரிவித்தார்.

இயந்திர மனிதக் கருவிகளில் பொருத்தப்பட்டுள்ள நிழற்படக்கருவிகளையும் ஒலிபெருக்கிகளையும் தலைமை நிலையத்திலிருந்தவாறே இயக்கலாம். தங்கும் விடுதிகளில் ஏதேனும் சிறு விபத்துகள் நிகழ்ந்தால் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த இயந்திர மனிதக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்வழியே தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருப்போரின் அருகில் அதிகாரிகள் செல்வதைத் தவிர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்காத வெளிநாட்டு ஊழியர்களுக்கு இயந்திர மனிதக் கருவியில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கியின் வாயிலாக நினைவூட்டப்படும் என்று ஆய்வாளர் டியோ கூறினார்.