செப்டெம்பர் 2020
சுத்திகரிப்பு என்பது கடினமான தொழில். அது சமூகத்திற்கு ஆற்றப்பெறும் சேவை என்றுகூடச் சொல்லலாம். அதிலும் கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரவும் சூழலில் சுத்திகரிப்புக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இத்தகைய சுத்திகரிப்புத் துறையில் உற்பத்தித்திறன் மிகுந்த இயந்திரத் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகித்து வருகிறார் முனைவர் மோகன் ராஜேஷ் இலரா, 39. சிங்கப்பூர்த் தொழில்நுட்ப வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் (SUTD) பொறியியல் உற்பத்தி மேம்பாட்டுத் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் ராஜேஷ் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் இயந்திரங்கள் குறித்துக் கடந்த பதினாறு ஆண்டுகளாக இயந்திரவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
"2011-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தேன். கூட்டாக இயந்திரவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது எந்தத் துறைக்கு இந்த இயந்திரங்களின் பயன்பாடு அவசியமாக இருக்கும் என்று சிந்தித்தோம். பராமரிப்பு, சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் மனிதவளம் குறைவாகவும் வேலை கடினமாகவும் இருக்கும் என்பதை அறிந்தோம். அதற்கு இயந்திரங்கள் பெருமளவில் உதவும். தூய்மைக்குச் சிங்கப்பூர் தரும் முக்கியத்துவம் அறியப்படுவதால் இங்குத் தயாரிக்கப்படும் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு அதிக மதிப்பு இருக்கும்," என்றார் ராஜேஷ்.
தேசிய இயந்திரவியல் திட்டத்தின்கீழ் அடிப்படை இயந்திரவியல் ஆராய்ச்சியை மேற்கொள்ள முடிந்தது என்றும் உலகின் மற்றப் பல நாடுகளை ஒப்பிடும்போது சிங்கப்பூர் அரசாங்கம் இயந்திரவியல் ஆராய்ச்சிக்கு வெகுவாக ஆதரவளித்துள்ளது என்றும் குறிப்பிட்டார் அவர்.
ஜூவல் சாங்கி, சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடம், ரயில் நிலையங்கள் முதலிய பொது இடங்கள், அலுவலக வளாகங்கள், கொவிட்-19 தொடர்பான தனிமைப்படுத்தும் வளாகங்கள் என்று பல இடங்களில் ராஜேஷ் ஆராய்ச்சியில் உருவான இயந்திரங்கள் செயற்பட்டு வருகின்றன. உள்ளூர் மட்டுமல்லாமல் உலகில் ஏறக்குறைய இருபது நாடுகளுக்கு இந்தச் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
"கிருமித்தொற்றுக் காரணத்தால் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முன்பெல்லாம் நாளுக்கு ஒரு தடவை மட்டுமே சுத்தம் செய்ய வேண்டிய இடத்தை இப்போது, பல முறை சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏற்படும் மனிதவளப் பற்றாக்குறையைப் பூர்த்திசெய்ய இயந்திரங்கள் கைகொடுக்கின்றன. கொரோனா நோயாளிகளுக்கான இடங்களைச் சுத்திகரிக்க இயந்திரங்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகவும் அமைகின்றது," என்றார் ராஜேஷ்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனிதர்களிடமிருந்து வேலை வாய்ப்புகளைப் பறித்துவிடுமோ என்று சமூகத்தில் நிலவும் அச்சம் குறித்துக் கருத்துரைத்தார் முனைவர் ராஜேஷ்.
"கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களிலும் அமைப்புகளிலும் இப்போது கணினி, இணையப் பயன்பாட்டைக் காணலாம். தொழில்நுட்பம் மனித வாழ்க்கைக்கு ஆக்ககரமாகப் பங்காற்றி வருகிறது. அது போலவே செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் எதிர்காலத்தில் சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பயன்படும். உதாரணத்திற்கு, சுத்திகரிப்புத் துறைப் பணியாளர்கள் துப்புரவு வேலை செய்வதற்குப் பதிலாக இயந்திரங்களை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தலாம். அவர்களுக்கு வேலைப்பளுவும் குறையும். வேலைகளின் தன்மைகள் மாறுமே தவிர வேலை வாய்ப்புகள்

