வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்: சேமிப்பு வருவாயில் பாதி எதிர்காலத்துக்குத் தேவை

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்: சேமிப்பு வருவாயில் பாதி எதிர்காலத்துக்குத் தேவை

1 mins read
27454e18-c9eb-45b1-966b-5fc0fc54df51
-

சிங்கப்பூர் தன்னுடைய சேமிப்பைப் பலவற்றிலும் முதலீடு செய்துள்ளது. அதில் கிடைக்கக்கூடிய வருவாயில் பாதியைச் சிங்கப்பூர் இப்போதைய தலைமுறைக்காகச் செலவிடலாம். மீதியை வருங்காலத் தலைமுறைக்காகச் சேமிக்க வேண்டும். இது ஒரு நியாயமான ஏற்பாடு என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மழைக்காலத்துக்குச் சேமிப்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பதுபற்றிக் குறிப்பிட்ட அமைச்சர், "தற்போதைய கொவிட்-19 தொற்றுநோய் நாட்டின் நிதியிருப்பில் கைவைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னோடித் தலைமுறையினரும் மெர்டேக்கா தலைமுறையினரும் தாங்கள் சம்பாதித்ததைக் குறைவாகவே செலவழித்திருக்கிறார்கள். அதனால்தான், நாட்டின் நிதியிருப்பில் குறிப்பிடத்தக்க தொகையை நம்மால் சேமிக்க முடிந்துள்ளது," என்றார். தமது சொந்தக் கதையை இதற்கு உதாரணமாகக் கூறினார் அமைச்சர்.

"சிறு வயதில் ஏழ்மையில் வளர்ந்த என் தாயார் தமக்குக் கிடைக்கும் சிறிய தொகையில் ஒரு பகுதியைச் சேமித்து வைத்தார். தாம் மரண தருவாயில் இருப்பதை அறிந்தபோது, தமது பேரப்பிள்ளைகளுக்காகப் பணத்தை ஒதுக்கினார். தமக்காகச் செலவழிக்காமல் தமது வருங்காலச் சந்ததியினருக்காக அவர் சேமித்து வைத்திருந்ததைக் கண்கூடாகப் பார்த்தேன்," என்று அவர் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

"இதைப் போலத்தான் சிங்கப்பூர் அரசாங்கமும் வருங்காலத்தில் நாம் எதிர்கொள்ளக்கூடிய சவால்களைச் சமாளிப்பதற்காகச் சேமித்து வைத்துள்ளது," என்று அமைச்சர் எடுத்துரைத்தார்.