பணத்தின் அருமையைப் பிள்ளைகளுக்குப் பெற்றோர் வலியுறுத்த வேண்டும்

பணத்தின் அருமையைப் பிள்ளைகளுக்குப் பெற்றோர் வலியுறுத்த வேண்டும்

2 mins read
47581370-d020-4255-8fad-960f6c937d24
-

பணத்தின் அருமையைப்பற்றிப் பிள்ளைகளிடம் எடுத்துக் கூறி உடனுக்குடனே விளக்குங்கள் என்று பெற்றோருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. வேலை பார்த்தால்தான் கடன் வாங்கலாம் அல்லது நிதிச் சேவைகளைப் பெறலாம் என்ற பழைய நியதி இனிமேல் பொருந்தாது.

நிதித் துறைத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல திட்டங்களைத் தீவிரமாகவும் புதுப் புதுப் பாணியிலும் நடப்புக்குக் கொண்டு வருவதே இதற்கான காரணம். இத்தகைய நிறுவனங்கள் பதினாறு வயதுக்கும் குறைந்த வாடிக்கையாளர்களுக்குப் புதிய சேவைகளை வழங்கி வருகின்றன.

எடுத்துக்காட்டாக, பதின்ம வயதினர் முன்னதாகவே பணம் நிரப்பப் பெற்ற அட்டைகளைக் கேட்டு விண்ணப்பிக்கலாம். அவற்றைக் கொண்டு கடைகளில் அவர்கள் பொருள்கள் வாங்கலாம். பதினெட்டு அதற்கும் அதிக வயதுள்ள இளைஞர்கள் 'வாங்கிப் பிறகு செலுத்துங்கள்' என்னும் ஏற்பாட்டின் வாயிலாகக் கடன்களைக்கூடப் பெறலாம். இத்தகைய கொடுக்கல் வாங்கலுக்குப் பொதுவாகப் பெற்றோர் சம்மதம் தேவையில்லை.

நிதித் துறைத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களுடன் இணையவழியாகவே தொடர்புகொள்கின்றன. சிறப்புச் செயலிகள் வாயிலாகப் பரிவர்த்தனைகள் பெரும்பாலும் இடம்பெறுகின்றன. வாடிக்கையாளர்கள் இந்தச் செயலிகளைத் தங்கள் கைத்தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பெரும்பாலான பெற்றோர்கள் பதினாறு வயதுக்கும் குறைந்த தங்கள் பிள்ளைகளுக்கு வங்கி அட்டைகள், மின்னிலக்கப் பரிவர்த்தனைகளைவிடக் கையில் ரொக்கமாகப் பணம் கொடுத்துப் பள்ளிகளுக்கு அனுப்பவே விரும்புகிறார்கள்.

எப்படிப் பணத்தைப் புழங்குவது என்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாகப் பெற்றோர்கள் பணத்தின் அருமையைப்பற்றியும் அதை எப்படியெல்லாம் வருமானத்திற்கு உட்பட்டுச் செலவழிக்க வேண்டும் என்பதுபற்றியும் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதிக வருமானம் பெறுபவர்களும் தங்கள் பிள்ளைகளிடம் பணத்தின் மதிப்புப்பற்றிப் புரியவைக்க வேண்டும். சரியான நியதிகளைப் பிள்ளைகளின் மனத்தில் பதியவைத்துவிட்டால் பணத்தைச் செலவழிக்கும் முறை எப்படி இருந்தாலும் அவர்களுக்குச் சிக்கல் இருக்காது.