முதியோரின் மின்னிலக்கச் சவால்களைத் தீர்ப்பவர்

முதியோரின் மின்னிலக்கச் சவால்களைத் தீர்ப்பவர்

3 mins read
da58a1da-1b73-4629-b079-c915b0dd5f8e
-

திறன்பேசியைப் பயன்படுத்த அறியாத தாயாருக்கு அடிப்படையான பயன்பாட்டைக் கற்றுக்கொடுக்க முயன்றார் இருபத்து ஐந்து வயது ரி‌ஷிகாந்தன் விஜயகுமார். மறுநாளே கற்றதை மறந்துவிட்டார் ரிஷியின் அறுபத்து மூன்று வயது தாயார் செந்தாமரை. பொறுமையிழந்து தாயாருக்குக் கற்றுக்கொடுப்பதையே நிறுத்திவிட்டார் ரிஷி.

கொவிட்-19 நோய்ப்பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்புக்கு வந்ததும் ரிஷியின் தாயார் தம் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்காமல் ஏக்கத்தில் இருந்தார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வீ கிம் வீ தொடர்பு, தகவல் பள்ளியில் இளநிலைத் தொடர்புக் கல்விப் பாடத்தில் இறுதியாண்டில் பயிலும் ரி‌ஷி அப்போது வேலைப் பயிற்சியை மேற்கொண்டிருந்தார்.

இரவில் ரி‌ஷி வீடு திரும்பும்வரை தாயார் காத்திருந்து, அவர் வந்தவுடன் 'வாட்ஸ் அப்' ஒளிக்காட்சி அழைப்பை இணைக்கக் கோருவார். ரி‌ஷிக்குத் தம் தாயாரின் நிலைமை புரிந்தது. அவர் பொறுமையுடன் எளிய முறையில் மீண்டும் தம் தாயாருக்குக் கற்பித்தார்.

அதே காலக்கட்டத்தில் ரிஷி தம் இறுதியாண்டுத் திட்டப் பணியை மேற்கொள்ளும் நேரமும் வந்தது. ஏதேனும் ஒரு தொடர்புப் பிரசாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே திட்டப் பணியின் எதிர்பார்ப்பு எனக் கூறப்பட்டது.

ரிஷி தமது மூன்று குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தபோது, தம் தாயார் எதிர்நோக்கிய சவாலையும் அதைத் தீர்த்து வைத்ததையும் குறித்துக் குழுவினரிடம் பகிர்ந்துகொண்டார். குழு உறுப்பினர்கள் ரி‌ஷியின் அனுபவத்தின் அடிப்படையில் தங்களின் தொடர்புப் பிரசாரத்தை உருவாக்கலாம் என்று முடிவெடுத்தனர்.

நான்கு மொழிகளில் எளிமை

இதையடுத்து, #CanOneLah! இயக்கத்தைத் தொடங்கி ஏறத்தாழ நூறு முதியோருக்கு உதவி புரிந்துள்ளனர் அக்குழுவினர். குறைந்த வருமானம், படிப்பறிவு அதிகம் இல்லாத முதியோருக்குப் படங்கள்வழி எளிய முறையில் திறன்பேசியைப் பயன்படுத்தும் முறைகளையும் இதர மின்னிலக்க முறைகளையும் கற்பிக்கும் முயற்சியில் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குழுவினர் மிகுதியான படங்களுடன் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் கையேடுகள் தயாரித்தனர்.

முதியோர் நடவடிக்கை நிலையங்களில் பயிலரங்குகள், இரு முதியோர் நடவடிக்கை நிலையங்களில் சாலைக் காட்சிகள் என ஏற்பாடு செய்திருந்த குழுவுக்கு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக நலன் சேவை மன்றத்தின் கிட்டத்தட்ட முப்பது தொண்டூழியர்கள் கைகொடுத்து வருகின்றனர்.

சமூக ஆதரவு வழங்குதல்

சமூக அளவில் ஆதரவு வழங்குவதே இவர்களது திட்டத்தின் நோக்கமாகும்.

குறிப்பாக நோய்ப்பரவல் சூழலில் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பார்த்துக்கொள்ள இயலாத நிலையில் 'வாட்ஸ் அப்' ஒளிக்காட்சி அழைப்பு, ஸூம்வழியே தொடர்புகொள்ள முதியோருக்குக் கற்றுக்கொடுத்தால் குடும்பத்தினரோடு அவர்கள் இணைய உதவும் என்பதை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மின்னிலக்கக் கல்வியை முதியோர் ஏற்றுக்கொள்ளும் வகையில் பொறுமையாக அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.

"என் அம்மாவை மனத்திற்கொண்டே இத்திட்டத்தைப் பரிந்துரை செய்தேன். என் அம்மாவுக்கு நேர்ந்த நிலை சமூகத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்," என்றார் ரிஷி.

"குறைந்த வருமானம் என்ற காரணத்தால் தொடக்கக் காலத்தில் எங்கள் குடும்பமும் சிரமப்பட்டது. என் சக நண்பர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளும் வசதிகளும் எனக்குத் தாமதமாகவே அமைந்தன," என்றார் ரி‌ஷி. கைத்தொலைபேசியை வைத்திருப்பது ஆடம்பரச் செலவு என்றும் வீண் செலவு என்றும் கேட்டு வளர்ந்தவர் ரி‌ஷி.

"ஆனால், இப்போது கைத்தொலைபேசிகள் இன்றியமையாப் பொருளாக மாறிவிட்டன. அதனால், முன்பு நான் இருந்த நிலையில் இப்போது இருப்பவர்கள் பாதிப்புக்கு உள்ளாகக்கூடாது என்பதே என் விருப்பம்," என்றார் அவர். இளநிலைப் பட்டப் படிப்பின் இறுதியாண்டுத் திட்டமான #CanOneLah! சமூகத்திற்கும் பலன் அளிக்கும் வகையில் இருப்பதால் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்னும் எண்ணத்தில் குழுவினர் உள்ளனர்.

"நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக நலன் சேவை மன்றத்திடம் ஒப்படைப்பது அல்லது முதியோர் நடவடிக்கை நிலையத்திடம் ஒப்படைப்பது முதலிய வழிகளை ஆராய்கிறோம். இத்திட்டத்திற்குத் தொடர்ந்து ஆலோசகர்களாக இருப்பதில் நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்," என்றார் ரி‌ஷி.