ஜூலை 2020
கொவிட்-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் பாதிப்படைந்துள்ளனர். வெளிநாட்டு ஊழியர்களிடம் அவரவர் தாய்மொழியிலேயே கிருமித்தொற்றின் தாக்கத்தைத் தெரிவிக்கும் அவசரச் சூழ்நிலை ஏற்பட்டது. இதை அறிந்து உடனடியாக உதவ முன்வந்த தொண்டூழியர்களுள் ஒருவர் திருமதி வித்யா தாஸ்குப்தா. கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் அரசு சார்பற்ற சில அமைப்புகளுடன் இவர் சேவையாற்றி வருகிறார்.
ஆங்கிலம் உட்படத் தமிழ், வங்காளம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளும் இவருக்குத் தெரியும் என்பதால் தமது திறனை நல்ல செயலுக்குப் பயன்படுத்தினார். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலெக்சாண்டிரா மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தொலைபேசிவழி வங்காள மொழிக்கான மொழிபெயர்ப்புச் சேவையை வழங்கினார்.
மேலும், மருத்துவமனையில் அவர்களுக்காகக் கொவிட்-19 தொடர்பான தகவல் சுவரொட்டிகளை ஆங்கிலத்திலிருந்து தமிழ்மொழியில் மொழிபெயர்த்துத் தந்தார் திருமதி வித்யா. மருத்துவமனைக் குழுவினர் சேவையாற்றும் மூன்று தங்கும் விடுதிகளில் கொவிட்-19 கிருமித்தொற்று விவரம், சுகாதாரக் குறிப்புகள் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. நாளடைவில் அரசு சார்ந்த அமைப்புகளும் இவரது சேவையை நாடி வந்தன.
"அதிகரித்து வரும் கிருமித்தொற்றுப் பாதிப்புக் கருதி, குறுகிய நேரத்தில் தகவல்களை உடனுக்குடன் மொழிபெயர்த்து அனுப்பும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும் வெவ்வேறு. அவை எளிமையான மொழி நடையில் இருக்க வேண்டும். அதே சமயம் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் பொருத்தமானவை என்பதை உறுதிசெய்ய உள்ளூர் ஊடகத் தமிழ்ச் செய்திகளையும் படித்தேன்," என்று சொன்னார் திருமதி வித்யா. 2020ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்கள் முழுவதும் முழு நேர வேலையில் ஈடுபடுவது போல இம்முயற்சியில் முழுமூச்சாக இறங்கினார் இவர்.
"எந்தெந்த இடங்களில் நான் மொழிபெயர்த்த தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. ஆனால், சாங்கிக் கண்காட்சி நிலையத் தற்காலிகக் கொவிட்-19 பராமரிப்பு வசதியிடத்தின் தகவல் ஒலிபரப்பில் அது இடம்பெற்றது," என்று கூறினார் திருமதி வித்யா. தன்னூக்கச் செய்திகள், உடற்பயிற்சி ஒளிக்காட்சிகள், கொவிட்-19 சோதனைக்கான முக்கியக் குறிப்புகள் எனத் தமிழ் எழுத்து மொழிபெயர்ப்பையும் குரல் பதிவுகளையும் இவர் கையாண்டார்.
"கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து சிங்கப்பூர் மீண்டு வர, வெளிநாட்டு ஊழியர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்பதை உணர்ந்தேன். எனது பங்கை ஆற்ற முடிந்ததில் மனமார்ந்த திருப்தி அடைகிறேன்," என்றார் இவர்.
ஒரு சமூக நிறுவனத்தின் தொழில்முனைவராகும் தம் இலக்குக்கு இத்தொண்டூழியப் பணி இட்டுச் செல்லும் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்தார் நிதித் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள 49 வயது திருமதி வித்யா தாஸ்குப்தா.

