யு நெங் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஏறத்தாழ இருநூறு மாணவர்களுக்கு நெற்பயிர் விவசாயம்பற்றிக் கற்றுக்கொடுக்கிறார்கள். இந்தத் திட்டத்தில் பங்கெடுப்பவர்கள் ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள். சுற்றுப்புறம்பற்றியும் உணவு விரயமாவதைத் தடுப்பதுபற்றியும் மாணவர்களுக்குக் கற்பிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இம்மாணவர்கள் நெற்பயிரைப் பயிரிடுகிறார்கள்.
வகுப்பறைகளில் விதை விதைத்து, பிறகு நாற்றைப் பிடுங்கி அறிவியல் சோதனைக்கூடத்திற்கு வெளியே இருக்கும் பெரும் கலன்களில் அவற்றை நட்டு மாணவர்கள் பயிர் செய்கிறார்கள். அந்தக் கலன்களின் மொத்த பரப்பளவு ஏறத்தாழ முப்பது சதுர மீட்டர் இருக்கும். சுமார் நான்குமுதல் ஐந்து மாதங்களில் நெற்பயிரை அறுவடை செய்யும்போது ஒவ்வொரு மாணவருக்கும் கிட்டத்தட்ட ஒரு கிண்ணம் அளவுக்கு அரிசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு விரயமாவதைப்பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. அதே வேளையில், இந்தத் திட்டம் மாணவர்களின் கல்விப் பாடங்களோடு ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதாக யு நெங் தொடக்கப்பள்ளியின் துணைமுதல்வர் லீ லி தெங் கூறினார். இந்தத் திட்டம் மீளுந்திறன் முதலிய விழுமியங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள உதவுகிறது என்று அறிவியல் துறைத் தலைவர் தேவி வாட்டி கூறினார். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் கனமழை காரணமாக நாற்றுகள் மூழ்கி மடிந்துவிட்டன. ஆனால், விவசாயத்தில் இப்படி நிகழ்வதெல்லாம் வழக்கமானவைதாம் என்று ஏற்றுக்கொண்டு மனந்தளராமல் மாணவர்கள் மீண்டும் நெற்பயிரை வளர்த்தனர் என்று திருவாட்டி டாய் வெய் லிங் என்னும் மாணவர் சேர்க்கை அதிகாரி தெரிவித்தார்.

