காகித மின்கலம் - புதுமையான கண்டுபிடிப்பு

காகித மின்கலம் - புதுமையான கண்டுபிடிப்பு

2 mins read
c998c2a6-d7c0-45ae-b009-56d7f923e5b0
'ஸ்கிரீன் பிரின்டிங்' முறையில் இந்தத் தாள் மின்கலத்தை எளிதாகத் தயாரிக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் -

மலிவான, மீண்டும் மீண்டும் மின்னேற்றக்கூடிய, மக்கும் தன்மை கொண்ட காகித மின்கலங்களை உள்ளூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த குழு தயாரித்துள்ள இந்த மின்கலம் கணிசமான மின்சாரத்தைத் தேக்கி வைக்கும் தன்மையுடையது. உதாரணத்திற்கு 4 செண்டிமீட்டர் அகலமும் 4 செண்டிமீட்டர் உயரமும் கொண்ட அச்சிடப்பட்ட இந்தக் காகித மின்கலம் 0.4 மில்லிமீட்டர் தடிமன் கொண்டதாக இருக்கும். ஆயினும், இந்த மின்கலத்தால் மின்விசிறி ஒன்றைக் குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு இயக்க முடியும் எனக் குழு தெரிவித்துள்ளது.

இது போன்ற புதுமையான கண்டுபிடிப்புகள் மின்சாரத்தின் பயன்பாட்டைக் குறைத்துச் சுகாதாரத்தை மேம்படுத்த உதவுகின்றன. மீண்டும் மீண்டும் மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலப் பயன்பாட்டால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மின்கலத்தின் பயன்பாடு குறையும். அதனால் ஏற்படும் தேவையற்ற கழிவும் குறையும்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மின்கலத்தைப் பயன்படுத்திய பின் அதனை நாம் தூக்கி வீசும்போது அது இறுதியில் நிலப்பரப்புகளைச் சென்று சேர்கின்றது. அங்கு மின்கலத்தின் உறை தேயும்போது அதன் உள்ளே இருக்கும் ரசாயனம் கசிந்து மண்ணுக்குள் சென்று இறுதியில் நீரோடு கலந்துவிடுகின்றது.

மேலும், சுற்றுச்சூழலைப் பேணிக் காக்க மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலத்தைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. அனைத்து வகையான மின்கலங்களும் சரியான முறையில் வீசப்படவும் வேண்டும். குறிப்பாக, மின்கலங்களைக் குப்பைகள் போடப் பயன்படும் குப்பைத்தொட்டிகளில் வீசாமல், அவற்றை மறுபயனீடு செய்யும் நிறுவனங்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். இம்முறையைச் சுலபமாக்கும்வண்ணம் சில நிறுவனங்கள் மின்னிலக்கச் சாதனங்களை மறுபயனீடு செய்வதற்கென்று குப்பைத்தொட்டிகளைப் பொருத்தியிருக்கின்றன. அங்கே பயன்படுத்தப்பட்ட மின்கலங்களை வீசலாம்.