பாரம்பரிய விளையாட்டுகள்வழிக் கணிதத்திறன்

பாரம்பரிய விளையாட்டுகள்வழிக் கணிதத்திறன்

3 mins read
ef4747a9-106d-47ff-ae9e-7fec3528b592
பல்லாங்குழி முதலிய பாரம்பரிய விளையாட்டுகள் பல வகை திறன்களை வளர்த்து வலுப்படுத்தும். படம்: அவுட்லுக் இந்தியா -

சிறுவர்முதல் பெரியவர்வரை அனைவரும் உற்சாகமாக விளையாடிக் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தத் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பெரிதும் துணைபுரிகின்றன. அதுமட்டுமல்லாமல் இவ்விளையாட்டுகள் கணித அறிவை வளர்த்துக்கொள்ளவும் உதவுகின்றன. தமிழர்களால் வழிவழியாக விளையாடப்பட்டு வந்த விளையாட்டுகளே தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் ஆகும்.

தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், பரமபதம், பம்பரம், சதுரங்கம், உப்பு மூட்டை தூக்கல், கூட்டாஞ்சோறு ஆக்கல், கோலி, கில்லி, ஒற்றையா இரட்டையா, கரகர வண்டி, சீதைப் பாண்டி, ஒருகுடம் தண்ணீர் ஊற்றி, குலைகுலையா முந்திரிக்காய், நொண்டியாட்டம் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டுகள் பழங்காலத்தில் விளையாடப்பட்டு வந்துள்ளன. இந்த விளையாட்டுகளில் பலவும் நமது நினைவாற்றலை மேம்படுத்திக் கணிதத்திறனை வளர்க்கின்றன. மேலும், உடலைப் புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமாகப் பேணவும் உதவுகின்றன.

கொவிட்-19 காலக்கட்டத்தில் வெளியே சென்று விளையாடுவது குறைந்து வரும் நிலையில், வீடுகளுக்குள் விளையாடக்கூடிய விளையாட்டுகளான தாயம், சதுரங்கம், பல்லாங்குழி முதலிய விளையாட்டுகள் மீண்டும் உயிர்பெற்று வருகின்றன.

"தாயம் என்பது விளையாட்டு மட்டுமன்று; கணித அறிவை மேம்படுத்தக்கூடியது. கணித அறிவு தாயம் விளையாட்டுக்கு அடிப்படை. அதுவும் ஈரைந்து, மூவாறு, இரண்டு, பன்னிரண்டு என்றெல்லாம் புள்ளிகள் விழும்போது அவற்றை மனத்தில் வைத்துக்கொண்டு கட்டங்களில் நகர்வதற்குக் கணிதத்தின் அடிப்படை அறிவு தேவை. பல்லாங்குழி, தாயம், பரமபதம், பம்பரம் உள்ளிட்ட விளையாட்டுகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன," என்கின்றனர் மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி, கற்றல் நிபுணர்களை உள்ளடக்கிய இந்திய நிபுணத்துவக் குழுவின் மருத்துவர்கள்.

கணித அறிவை வளர்க்கும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளுள் சிலவற்றைக் காண்போம்:

பல்லாங்குழி: 14 குழிகள் உள்ள பலகையில் புளியம்பழ விதைகள் அல்லது சோழிகளைக் கொண்டு விளையாடுவதால் விரலுக்குப் பயிற்சியளிப்பதோடு நம் நினைவாற்றலும் அதிகரிக்கிறது. பல்லாங்குழி விளையாடும்போது முத்துப்பாண்டி எடுப்பதால் சிறுவர்களுக்குக் கணித அறிவு வளரும். இவ்விளையாட்டில் எண்களைச் சொல்லிக்கொண்டே விளையாடுவது நல்லதொரு வாய்ப்பாகும். இதனால் சிந்தனைத்திறன் மேலோங்கும்.

தாயம்: இருவர் அல்லது நால்வர் இணைந்து நான்கு காய்களைக் கொண்டு இவ்விளையாட்டை விளையாடுவர். முதலில் யார், சதுரங்கப் பலகையில் உள்ள மற்றவரின் காய்களை வெட்டி அவர்களிடம் இருந்து தப்பித்து, வெற்றிபெறுவார் என்பதே இவ்விளையாட்டில் சுவாரசியம் கூட்டும் அம்சமாகும். காய்களை வெட்டி வீழ்த்தும்போது மீண்டும் முயற்சி செய்து முன்னேற வேண்டும் என்னும் ஊக்கம் விளையாட்டாளர்களுக்குப் பிறக்கும். அத்துடன், நமது கணிதத்திறனும் வலுப்பெறும். சாதுர்யம், மனவுறுதி முதலியவை மேம்படும்.

பம்பரம்: இவ்விளையாட்டை விளையாடுவதால் கை, கால் அசைவுகளை மேம்படுத்துதல், நினைவாற்றல் ஆகியவற்றில் மேம்பாடு காணலாம்.

பச்சைக் குதிரை: சிறுவர்கள் விரும்பி விளையாடும் இவ்விளையாட்டின்வழி வந்ததுதான் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள். உடல்திறன் மேம்படுவதுடன், எச்சரிக்கை மனப்பான்மையும் ஏற்படும்.

பாரம்பரிய விளையாட்டுகளில் பல ஏற்கெனவே காணாமல் போய்விட்டன. நம் நினைவுகளில் எஞ்சியிருக்கும் ஒரு சில விளையாட்டுகளை இன்றைய தலைமுறையினருக்குக் கற்றுத் தருவது நம் மூதாதையர்களுக்கு நாம் செய்யும் பெரும் கடமையாக இருக்கும்.