தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்குரிய நிதியறிவுக் கல்வித்திட்டம்

தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்குரிய நிதியறிவுக் கல்வித்திட்டம்

2 mins read
3d121795-a45b-4edd-9bad-be6321697774
கோப்புப்படம் -

தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் கடந்த ஆண்டு அதிகம் சேமித்துள்ளனர். இது எவ்வாறு சாத்தியமானது? சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிதியறிவுக் கல்வித்திட்டம் இதற்கு ஒரு காரணம் என்று அண்மையில் 2,500 மாணவர்கள் பங்கேற்ற கருத்தாய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

நாணய மதிப்பைப் பொறுத்த அளவில், இம்மாணவர்களின் சேமிப்பு எண்பது விழுக்காடு கூடியிருப்பதாக இத்திட்டத்தை வழிநடத்தும் தொழில்நுட்பக் கல்விக் கழகமும் டி.பி.எஸ் வங்கியும் (DBS Bank) தெரிவித்தன. இல்லம் சார்ந்த கற்றல் முறையின்வழியாகத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயிலும் 27,000 மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் டி.பி.எஸ் கூறியது.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் சோதனையில் முதல் ஆண்டு மாணவர்கள் 10,000 பேர் சேர்க்கப்பட்டனர். நிதி நிலைமையைக் கண்காணிப்பது, ரொக்கமற்ற கட்டண முறை, வரவு செலவுத் திட்டத்தை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் இம்மாணவர்களுக்குக் கற்றுத்தரப்பட்டன. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்காக வகுக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் மத்திய சேமநிதி சந்தா, காப்புறுதித் திட்டங்களின் வெவ்வேறு வகைகள், இணையப் பாதுகாப்புக்கான சிறந்த வழிமுறைகள் உள்ளிட்டவை விளக்கப்படும்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் இளைஞர்களுக்குரிய நிதியறிவுத் திட்டப்பிரிவும் 'சிட்டி ஃபவுண்டேஷன்' (City Foundation) நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில் மூன்றில் ஒரு சிங்கப்பூரர் கடன்களைச் சமாளிக்கத் தெரியாமல் தடுமாறுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இளைஞர்கள் தங்கள் நிதியறிவை வளர்த்துக்கொள்வதும் பொருளியலைப்பற்றித் தெரிந்துகொள்வதும் மிக முக்கியமானவையாகும். மாறிவரும் உலகப் பொருளியல் நிலவரத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நிதி தொடர்பான முடிவுகளை எடுப்பது வருங்காலத்தில் நிதிச் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.