செயற்கை நுண்ணறிவுடன் கூடிய உள்ளூர் இணையத்தளம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் மொழிபெயர்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'SG Translate Together' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இணையத்தளம் (https://www.sgtranslatetogether.gov.sg/) சந்தையில் உள்ள மற்ற மொழிபெயர்ப்புத் தளங்களைவிடச் சிங்கப்பூரின் சூழலுக்கு ஏற்ப அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
உள்ளூர் அரசாங்கத் தொடர்புத் தகவல்களில் உள்ள தரவுகள் இந்த 'SG Translate Together' இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதால், 'மெடிசேவ்', 'முன்னோடித் தலைமுறை' முதலிய உள்ளூர்க் கலைச்சொற்களை உள்ளடக்கிய மொழிபெயர்ப்பை அது வழங்கும்.
ஏ*ஸ்டார் (A*Star) அமைப்பின் தகவல், தொடர்பு ஆய்வுக் கழகத்துடன் இணைந்து தொடர்பு, தகவல் அமைச்சு 'SG Translate Together' இணையத்தளத்தை உருவாக்கியதுடன், கடந்த ஆண்டு ஜூலை மாதம்முதல் அரசாங்க முகவைகளின் பயன்பாட்டுக்கும் வழங்கியது. இந்த இணையத்தளம் அடுத்த ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட சில குழுக்களின் பயன்பாட்டுக்கும் வழங்கப்படவிருக்கிறது என்று தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த இணையத்தளத்தின் துல்லியத்தை மேம்படுத்தத் திட்டப்பணியில் ஈடுபடுவோர் உதவக்கூடும். ஊடகத்தினர், தனிநபர்கள், மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபடும் நிறுவனத்தினர், மொழிபெயர்ப்பைப் பாடமாகக் கற்பிக்கும் உயர்கல்விக் கழகத்தினர் முதலியோர் 'Sg Translate Together' என்னும் திட்டப்பணியில் இணைந்து செயற்படுவர்.
இந்தப் புதிய இணையத்தளத்தைக் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் பற்றிய செய்திகளை மொழிபெயர்ப்பது முதலியவற்றுக்கு அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். 'SG Translate Together' இணையத்தளத்தின் மொழிபெயர்ப்பு மெருகேற்றப்படுவதன்வழி மொழிபெயர்ப்புப் பணிக்காகச் செலவிடப்படும் நேரம் குறைவதாகக் கூறப்பட்டது.

