உலக விருதுக்குத் தேர்வுபெற்ற சுவா சூ காங் நீர்ச் சுத்திகரிப்பு ஆலை

உலக விருதுக்குத் தேர்வுபெற்ற சுவா சூ காங் நீர்ச் சுத்திகரிப்பு ஆலை

2 mins read
8f120dfd-4def-41e0-a3e8-b8d55f0828db
-
multi-img1 of 2

புதிதாக மேம்படுத்தப்பட்ட சுவா சூ காங் நீர்ச் சுத்திகரிப்பு ஆலை இவ்வாண்டின் சிறந்த தண்ணீர்த் திட்டப்பணியாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதைப் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

2020-ஆம் ஆண்டுக்கான உலகத் தண்ணீர் விருதுக்கு இந்த ஆலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நேற்று கழகம் கூறியது. அனைத்துலகத் தண்ணீர்த் துறையில் மிகவும் அவசியமான செயலாக்கத்திறனை மேம்படுத்துதல், புத்தாக்கத்தைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட சாதனைகளை அங்கீகரிக்கும்வண்ணம் இவ்விருது கடந்த 2006-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் உலகளவில் வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரின் சுத்திகரிப்பு ஆலையைப் போலவே அமெரிக்கா, பிலிப்பீன்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளும் இவ்வாண்டின் விருதுக்குத் தகுதி பெற்றுள்ளன.

உலகத் தண்ணீர் அறிவாற்றல் நிறுவனம் இந்த விருதை வழங்கி வருகிறது. பெருமைக்குரிய இந்த உலகத் தண்ணீர் விருதைப் பொதுப் பயனீட்டுக் கழகம் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாகப் பெற்றுள்ளது.

2018-ஆம் ஆண்டில் உலு பாண்டான் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு ஆலை கழிவுநீர்த் திறன் திட்ட விருதைப் பெற்றது. எரிசக்தி, ஊழியர்கள், நிலப்பரப்பு ஆகிய அம்சங்களை இந்த ஆலை குறைவாகப் பயன்படுத்துகிறது. இடத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் தொட்டிகள், எரிசக்தியைக் குறைவாகப் பயன்படுத்தும் முறைகள், தானியக்கக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் முதலியவை இங்குச் செயற்பாட்டில் உள்ளன.

கடந்த ஆண்டுக்கான கடல் நீரைக் குடிநீராக்குவதற்கான விருதைத் துவாஸ் ஆலை தட்டிச் சென்றது. சுவா சூ காங் நீர்ச் சுத்திகரிப்பு ஆலை, உலு பாண்டான் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு ஆலை, துவாஸ் கடல்நீர்ச் சுத்திகரிப்பு ஆலை ஆகிய மூன்றும் பொதுப் பயனீட்டுக் கழகத்தால் நிர்வகிக்கப்படுபவையாகும்.

சுவா சூ காங் நீர்ச் சுத்திகரிப்பு ஆலை சிங்கப்பூரின் ஆகப் பழமையானது. 1975-ஆம் ஆண்டிலும் தொடர்ந்து 1981-ஆம் ஆண்டிலும் இவ்வாலை இரு கட்டங்களாகக் கட்டப்பட்டது.

உலகிலேயே ஆகப்பெரிய பீங்கான் சவ்வுத்திறன்வழி நீரைச் சுத்திகரிக்கும் முறையைக் கொண்டுள்ளது சுவா சூ காங் நீர்ச் சுத்திகரிப்பு ஆலை. இந்தச் சுத்திகரிப்பு ஆலையை மேம்படுத்தும் பணிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கின. சுமார் $162 மில்லியன் செலவிலான புதுப்பிப்புத் திட்டம் மூன்றாண்டுகள் நீடித்தன.

பீங்கான் சவ்வுத்திறன்வழி நீரைச் சுத்திகரிக்கும் முறை அதிக ஆற்றல் வாய்ந்தது. இதற்கு முன்னர்ப் பின்பற்றப்பட்ட நீரிலிருந்து மணலை வடிகட்டும் முறையைக் காட்டிலும் இது மேம்பட்டதாகும்.