குடிநீர் சிங்கப்பூரில் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய ஒன்று அன்று. ஆகவே, கடல்நீரிலிருந்து உப்பை அகற்றும் தொழில்நுட்பங்களைச் சிங்கப்பூர் இதற்காகப் பயன்படுத்தி வருகின்றது. இது போன்ற தொழில்நுட்பங்களைப் பராமரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அதிக அளவில் செலவிட வேண்டிய நிலைமை இருப்பதால் குடிநீரின் விலை உயர்ந்துகொண்டே வருகின்றது. ஆகவே விலை ஏற்றம், நீர்ச் சேமிப்புத் திட்டங்களை அமல்படுத்துவது ஆகிய அமலாக்கங்களைக் கொண்டுவருவதைத் தவிர, நீரை வீணடிக்காமல் இருக்கப் பொதுமக்கள் என்ன செய்யலாம் என்னும் வினா எழுகின்றது.
சிங்கப்பூரில் ஒரு குடும்பத்தில் மொத்தமாகப் பயன்படுத்தும் நீரில் முப்பது விழுக்காடுவரை குளிக்கும்போது விரயமாகும் நீர் அடங்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு விரயமாகும் நீரைக் கருத்திற்கொண்டு நீர்ப் பயன்பாட்டை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்த ஆராய்ச்சியில் நிபுணர்கள் சிலர் ஈடுபட்டனர்.
நீரை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் சில பழக்கங்களை மாற்ற எவ்வளவு நீர் சேமிக்கப்படுகின்றது என்பதைக் காட்டும் கருவிகளை வீடுகளில் பொறுத்தலாம் எனச் சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும்போது, குடும்பங்கள் பயன்படுத்தும் நீரின் அளவு ஏறக்குறைய இருபத்து இரண்டு விழுக்காடுவரை குறைந்துள்ளதை ஆய்வாளர்கள் கவனித்தார்கள். இக்கருவிகள் சிங்கப்பூர் மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற வினாவுக்குப் பதிலளிக்க ஐந்நூறு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் இக்கருவிகள் பொறுத்தப்பட்டன.
ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த அந்த ஐந்நூறு வீடுகளின் நீர்ப் பயன்பாடு நான்கு மாதங்களுக்குக் கண்காணிக்கப்பட்டது. ஐந்து பிரிவுகளுக்கு வெவ்வேறு குறிக்கோள்கள் கொடுக்கப்பட்டன. சில பிரிவுகளுக்குப் பத்து அல்லது பதினைந்து லிட்டர்வரை மட்டுமே நீரைச் செலவு செய்ய வேண்டும் என்ற கடினமான குறிக்கோள் கொடுக்கப்பட்டது. மற்றச் சில பிரிவுகளுக்கு இருபது அல்லது இருபத்து ஐந்து லிட்டர் நீரை மட்டுமே செலவழிக்க வேண்டும் என்ற சற்றுச் சுலபமான குறிக்கோள் தரப்பட்டது. இறுதியாக இருந்த சில பிரிவுகளுக்கு முப்பத்து ஐந்து லிட்டர்வரை நீரைச் செலவழிக்கலாம் என்ற மிகச் சுலபமான குறிக்கோள் வழங்கப்பட்டது.
இந்த ஆய்வின்வழிக் குறிக்கோள்களுடன் செயற்பட்ட குடும்பங்கள் நீர்ச் சேமிப்புப்பற்றி மேலும் தெரிந்துகொண்டார்கள் என்றும் நீரை அளவுக்கு அதிகமாகச் செலவழிக்காமல் இருந்தார்கள் என்றும் தெரியவந்தது.
அத்துடன் மிகவும் கடினமான குறிக்கோள்களையும் சுலபமான குறிக்கோள்களையும் கொண்டு செயற்பட்ட குடும்பங்கள் நீரைச் சேமிக்க முன்வரவில்லை என்றும் தெரியவந்தது. ஆகையால், அடையக்கூடிய குறிக்கோளுடன் செயற்படுவதே பல குடும்பங்களை நீரைச் சேமிக்க ஊக்குவித்து அவர்கள் நீர் சேமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் குறைந்த நேரத்தில் பழக்கமாக்க உதவியது என்று ஆய்வில் தெரியவந்தது.

