உலக வெப்பமயமாதல், அதிவேக நகரமயமாக்கல் முதலியவற்றின் விளைவாகக் குடிநீர்ப் பற்றாக்குறை இன்று உலகிலுள்ள பல நாடுகளையும் அதிக அளவில் பாதிக்கின்றது. நீர்த்தேக்கங்கள் முதலிய நீர் சேமிப்பதற்குரிய கட்டமைப்புகள் தீவெங்கும் இருந்தாலும் குடிநீருக்காக மலேசியாவை நம்பியிருக்கும் சிங்கப்பூரும் இப்பாதிக்கப்பட்ட நாடுகளுள் அடங்கும்.
சிங்கப்பூர் நீருக்காக மற்றவர்களை நம்பியிருக்கும் நிலைமையை மாற்றப் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளை உருவாக்கி வரும் நிறுவனங்களுள் ஒன்று ஸ்னைடர் ஆய்வகம் (Schneider Electric Singapore). இந்நிறுவனத்தின் முக்கியக் கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக அசுத்தமான நீரைச் சுத்திகரிப்புச் செய்யும் உறிஞ்சுபொருள் விளங்குகிறது.
நீரிலுள்ள மாசுப்பொருள்கள், அழுக்குகள் முதலியவற்றை உறிஞ்சும் இப்பொருள் தனது எடையைவிட நூற்றுத் தொண்ணூறு மடங்கு அதிகமான எடையைக் கொண்டுள்ள கழிவுகளை அகற்றக்கூடியதாக விளங்குகிறது. பொதுப் பயன்பாட்டுக்காகத் தற்போது இப்பொருள் 'இக்கோவர்த் டெக்' (EcoWorth Tech Pte. Ltd.) என்னும் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் சிங்கப்பூரிலுள்ள அசுத்த நீரைச் சுத்தப்படுத்தப் பயன்படவிருக்கும் இப்பொருள் பிறகு, மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று நிறுவனத்தின் தலைவர் திரு அன்ட்ரே ஸ்டோட்ஸ் (Andre Stolz) கூறியுள்ளார்.
இதே போல், 'வாட்டரோம்' (Wateroam) என்னும் நிறுவனமும் சிங்கப்பூரில் நீர்ச் சுத்திகரிப்பை மேம்படுத்தத் தனது பங்கை ஆற்றி வருகின்றது. 2014-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் குறைந்த எடையைக் கொண்ட, உடன் எடுத்துச் செல்லக்கூடிய நீர்ச் சுத்திகரிப்புச் சாதனத்தை உருவாக்கியுள்ளது. இதுவரை இந்நிறுவனம் தென்கிழக்கு ஆசியாவில் வாழும் 75,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இப்பொருளின் உதவியோடு சுத்தமான நீரை வழங்கியுள்ளது.
அனைவரும் சுலபமாகப் பயன்படுத்துவதற்கு மிக எளிதான தொழில்நுட்பத்தின் உதவியோடு இந்தச் சுத்திகரிப்புப் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய அளவில் இருக்கும் இந்தச் சாதனத்தால் ஈராண்டுகள்வரை நூறு பேருக்குச் சுத்தமான குடிநீரை வழங்க இயலும்.

